104 இடங்களில் முன்னிலை பெற்ற தவெக! தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்..?

TVK Vijay
Vijay in assembly AI
Updated on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் , மற்ற திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ச்சியாக முன்னிலை பெற்று வருகிறது. காலையில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக முன்னிலையில் வந்து கொண்டிருந்தது. ஆனால், மதியத்திற்கு பிறகு திமுக சற்று எழுச்சி பெற்று இரண்டாம் இடத்தை நோக்கி செல்கிறது.

மாலை 4.30 மணி நிலவரப்படி தவெக 104 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள திமுக 73 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 3 மூன்றாவது இடத்திற்கு பின் தங்கியுள்ள அதிமுக கூட்டணி 57 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

234 சட்டமன்ற தொகுதிகள் உள்ள தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் , 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் இதுவரை தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று, பல இடங்களில் முன்னிலை பெற்று, இந்த சட்டமன்றத் தேர்தலில் முதலிடம் பெற்றுள்ளது.

தற்போதைய நிலவரத்தின்படி வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டுகிறது. 104 தொகுதிகளில் மட்டுமே தவெக முன்னிலையில் இருப்பதால் அதன் அதிகபட்ச வெற்றி வாய்ப்பு 3-5 தொகுதிகள் வரை கூடவோ குறையவோ இருக்கலாம். ஆயினும் மேஜிக் நம்ப 118 ஐ பெற வாய்ப்புகள் குறைவு என்பதால், விஜய் அதிமுக அல்லது திமுக கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம்.

வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் எந்த கட்சி அதிக அளவு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளதோ(தவெக)அந்த கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார். ஆட்சி அமைத்த பின்னர் 15 நாட்களுக்குள், ஆளுநர் கெடு விதிக்கும் தேதிக்குள் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதாவது சட்டமன்றத்தில் 118 உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டும். அவ்வாறு பெற தவறினால் ஆளுநர் அந்த ஆட்சியை கலைத்துவிட்டு , அடுத்த பெரிய கட்சியான திமுகவை ஆட்சி அமைக்க அழைப்பார்.

திமுக 73 இடங்களை மட்டுமே பெற்றுள்ளதால், அதனால் மேஜிக் நம்பரை பெற வாய்ப்பு மிகவும் குறைவு, என்பதால் கவர்னர் சில மாதங்கள் சட்டமன்றத்தை மூடலாம். அந்த காலகட்டத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சி தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும். அப்போது ஏதேனும் ஒரு கட்சி 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்றால்,மீண்டும் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க கோர முடியும்.

அப்போது மீண்டும் சட்டமன்றம் கூட்டப்பட்டு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். அந்த முறையும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால் சட்டமன்றம் தற்காலிகமாக முடக்கப்படலாம் அல்லது ஆளுநரின் தனிப்பட்ட முடிவின்படி சட்டமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் மறு தேர்தல் நடத்த உத்தரவிடலாம். இந்த விஷயத்தில் ஆளுநர் எந்த ஒரு முடிவு எடுக்கும் அதிகாரமும் பெற்றவர்.

தற்போதைய கணக்கின்படி விஜய்க்கு 14 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுவதால் , அவர் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 4 , அமமுக 1, மற்றும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 5, விசிக 1, தேமுதிக 1 , சிபிஐ 1, சிபிஎம் 2 ஆகிய சிறு சிறு கட்சிகளுடன் ஆதரவுக்கு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம். ஆனால் , இதற்கு அவர்கள் ஒப்புக் கொள்வதும் அவசியம்.

அல்லது அதிமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் 57 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் விஜய் எளிதில் ஆட்சி அமைக்கலாம். இது போன்ற சூழலில் நிச்சயமாக அதிமுக கட்சி துணை முதல்வர் பதவியையும் , அத்துடன் சில அமைச்சர் பதவிகளையும் கேட்க கூடும். கூட்டணியில் அடுத்த பெரிய கட்சியாக பாமகவும் ஒரு அமைச்சர் பதவியை கேட்கலாம்.

தற்போதைய அரசியல் சூழலின்படி ஆளுநர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். குறிப்பிட்ட தினங்களுக்குள் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com