

அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் விரிவுபடுத்தப்பட்ட ‘வெற்றிப் பயணம்’ திட்டம் இன்று (அக்.2) முதல் நடைமுறைக்கு வரும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மகளிர் பயணம் என்ற பெயரில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக செல்லும் திட்டம் நடைமுறையில் உள்ளது. மகளிருக்கான இலவச பஸ் பயணத் திட்டத்தின் கீழ் தற்போது 7 அரசு போக்குவரத்துக் கழகங்களில் நகர சாதாரண பஸ்கள் மற்றும் 40 கி.மீட்டர் வரையிலான மலைப்பகுதி சாதாரண பஸ்களில் மகளிர்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் தேதி ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டம் அடித்தட்டு மற்றும் உழைக்கும் பெண் தொழிலாளர்கள், மாணவிகள் மற்றும் ஒட்டுமொத்த மகளிர் சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெருமளவில் துணையாக இருந்து வருகிறது. இந்த திட்டத்தால் மகளிர் பொருளாதாரம் மேம்பாடு அடைந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவெக தலைவர் விஜய், பெண்களுக்கான பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தார். அவற்றில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்த வாக்குறுதி முக்கியமானதாக இருந்தது. பெண்கள், தமிழ்நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் எந்த இடத்திற்கும் அனைத்து விதமான அரசுப் பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணம் செய்யலாம். சாதாரண பேருந்துகள் மட்டுமல்லாமல், விரைவுப் பேருந்துகள் மற்றும் ஏசி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகை அரசு பேருந்துகளிலும் மகளிர் மற்றும் மாணவிகள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைந்த பிறகு, மகளிர் இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளான இன்று (அக்டோபர் 2) முதல் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.
இதன் மூலம் முதல் கட்டமாக, மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ்(LSS), டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக முதலமைச்சர் விஜய் இன்று காலை 10 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்று அங்கு காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு, இந்த வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ள வெற்றி பயணம் திட்டத்தின் மூலம் மாநகர, நகரப் பகுதிகளில் இயங்கும், எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ்(LSS), டீலக்ஸ், அரசு பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.,க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகள் ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு மொத்தமாக, 12 ஆயிரத்து 692 பேருந்துகளில், இலவசமாக மகளிர் பயணம் செய்யலாம்.
கூடுதலாக, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரண கட்டணப் பேருந்துகளிலும், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பெண்களும், உயர் கல்வி பயிலும் மாணவிகளும் மற்றும் திருநங்கைகளும் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம். இத்திட்டத்திற்கு வருமான வரம்போ அல்லது பயணங்களின் எண்ணிக்கைக் கட்டுப்பாடோ கிடையாது. இதை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி செலவினம் ஏற்படும்.
இதன் மூலம் 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்தம் 18 ஆயிரத்து 413 திட்டமிடப்பட்ட பஸ்களில் 12,692 பஸ்கள், மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரத்து 649 நடைகளில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 312 நடைகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தினமும் 84.32 லட்சம் பெண் பயணிகள் பயனடைவார்கள்; மாநிலம் முழுவதும் தமிழக மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும்.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் தமிழக மகளிர்க்கான எளிதில் அணுகக் கூடிய பொது போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும்.
தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இந்த திட்டம் அங்கு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.