தமிழகத்தின் பொருளாதார நெருக்கடியில் விஜய்யின் "தங்கம் திட்டம்" சாத்தியமா? நிபுணர்கள் கவலை!

Vijay electoral promises
Vijay electoral promises
Updated on

தமிழக அரசு சந்தித்து வரும் தற்போதைய நெருக்கடியான பொருளாதார சூழலில் தேர்தல் அறிக்கையில் விஜய் அறிவித்த ‘தங்கம்’ தொடர்பான திட்டங்கள் சாத்தியமா? என்பது குறித்து பொருளாதார நிபுணர்களின் கருத்தை பார்க்கலாம்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைப்பற்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் கூட்டணி சேர்த்து ஆட்சி அமைத்தது. இதையடுத்து கடந்த 10-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதலமைச்சராக பதவி கொண்டார்.

விஜய் முதலமைச்சராக பதவியேற்ற உடனேயே பல அதிரடியான நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் 717 மதுக்கடைகள் மூடல், பெண்களின் பாதுகாப்பிற்கு சிங்க பெண் சிறப்பு அதிரடி படை உருவாக்கம், போதைப்பொருளை ஒழிக்க சிறப்பு காவல் நிலையங்கள் என அதிரடி காட்டி வருகிறார்.

அதேபோல் முந்தைய திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மே மாதத்திற்கான 1000 ரூபாய் பணத்தை தவெக அரசு, ஒரு கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! முதல்வர் விஜய் போட்ட ரகசிய உத்தரவு?
Vijay electoral promises

இதற்கிடையே தவெகவின் தேர்தல் வாக்குறுதியான மாதம் ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க விஜய், தேர்தல் வாக்குறுதியாக ஏழை பெண்களுக்கு அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் ‘திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம்’, ‘தாய்மாமன் சீர் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்’ வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்று பொதுமக்கள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர். இதற்கிடையே மேற்காசிய போர் பதற்றம் காரணமாக கொரோனா பேரிடரில் ஏற்பட்டது போன்ற நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது. இந்த சூழலில் அந்நிய செலாவணியை குறைப்பதற்காக பொது மக்களுக்கு தேவை இல்லாமல் தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டுக்கு தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியும் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம்-இறக்கம் நிலவி வருகிறது. இது போன்ற சூழலில் விஜய் அறிவித்துள்ள அண்ணன் சீர் திட்டம், தாய்மாமன் சீர் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 2024-25-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 547 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு தலா ஒரு கிராம் வீதம் (ஒரு கிராம் தங்கம் சுமார் ரூ.15,000 என வைத்துக்கொண்டால்) கொடுத்தால் கூட ஆண்டுக்கு ரூ.677 கோடி வரை செலவாகும்.

இதையும் படியுங்கள்:
4 குழுக்களாக பிரிந்த தவெக.! விஜய்யின் அதிரடி முடிவு.!
Vijay electoral promises

தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியுமா? என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேசமயம், விஜய் அறிவித்த திட்டம் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்வதை பொதுமக்களிடைய ஊக்குவிக்கும் என்று பொது சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com