

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலில் இருந்த திராவிட கட்சிகளை முதல் தேர்தலிலேயே கீழே இறக்கி விட்டார் தவெக தலைவர் விஜய். தற்போது வரை 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக, ஆட்சி அமைக்க 11 எம்எல்ஏ-க்கள் தேவைப்படுகின்றனர். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்த பிறகு, லால்குடி தொகுதியில் தோல்வியடைந்த கு.ப.கிருஷ்ணனை களமிறக்க தவெக தலைமை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிக்க எந்த கட்சி முன்வரும் என்ற கேள்வி மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் முடிவை தமிழ்நாடு மாநில காங்கிரஸே எடுக்கும் என டெல்லி தலைமை தெரிவித்துள்ளது.
இருப்பினும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவை தவெக ஏற்கக் கூடாது என்ற நிபந்தனை காங்கிரஸ் தரப்பில் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக நிபந்தனையின்றி வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தவெக-விற்கு அதிமுக ஆதரவு அளிக்காது என எம்எல்ஏ ஓஎஸ்.மணியன் தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்க பல்வேறு கட்சிகளிடம் தவெக 4 குழுக்களாக பிரிந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இருப்பினும் ஆதரவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சியின் ஆதரவை தவெக கோரியதாக நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், எப்போதும் நாங்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என்றும், தவெக தரப்பிலிருந்து ஆட்சி அமைக்க ஆதரவு வேண்டும் என எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய கட்சியான IUML, ஏணி சின்னத்தில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க பாமக முன் வரலாம் என்ற கருத்துக்களும் வெளியாகின்றன. இருப்பினும் தவெக-விற்கு ஆதரவாளிக்கும் கட்சிகள் எவை என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வரை வெளிவரவில்லை.
ஆகையால் யூகத்தின் அடிப்படையிலேயே எந்தெந்த கட்சிகள் தவெக-விற்கு ஆதரவு அளிக்கும் என்றே தற்போது பேச்சுகள் அடிபடுகின்றன.
நேரு ஸ்டேடியத்தில் நாளை தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில், கூடிய விரைவில் ஆதரவு அளிக்கும் கட்சிகளின் விவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.