

தமிழ் திரையுலகில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேடி நடித்து வருபவர் விக்ரம் பிரபு. இவர் சமீபத்தில் நடித்த 'சிறை' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று, பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய இந்த திரைப்படம் சிறைக் கைதி மற்றும் காவலர் ஆகியோருக்கு இடையிலான மனப் போராட்டத்தையும் , கைதியின் காதல் ஆகியவற்றை விவரிக்கும் திரைப்படமாகவும் இருந்தது.
இதற்கு முன்னர் விக்ரம் பிரபு 'டாணாக்காரன்' என்ற திரைப்படத்தில் பயிற்சி பெறும் காவலராக நடித்திருந்தார். அந்த திரைப்படம் காவலர் பயிற்சி பெறும் இளைஞர்கள் சந்திக்கும் கொடுமைகளை பற்றி பேசி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சிறை திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இதன் தயாரிப்பாளர் லலித்குமார் தனது மகன் எல்.கே.அக்ஷய் குமாரை இந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்திருந்தார். இந்தக் கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறை திரையரங்குகளில் வெற்றிகரமாக 75 நாட்களைக் கடந்து ஓடுகிறது. திரையரங்கில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் போதே இப்படம் ஓடிடியில் வெளியாகியது. இது பெற்றிருந்த நல்ல விமர்சனங்களால் ஓடிடியிலும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதனை கொண்டாடும் விதமாக நேற்று (மார்ச் 14) சென்னையில் வெற்றி விழா நடத்தப்பட்டது.
இந்த வெற்றி விழாவில் படத்தின் நாயகன் விக்ரம் பிரபு கலந்துக் கொண்டு பேசினார். அவர் "ஒவ்வொரு முறையும் நான் கேமரா முன்னால் நிற்கும் போது, என் தாத்தா சிவாஜி கணேசன் மற்றும் என் அப்பா பிரபு ஆகியோர், இந்த திரையுலகில் பெற்றிருந்த நற்பெயரை நான் காப்பாற்ற வேண்டும் என்ற பெரும் பொறுப்பும் ஒருவித பயமும் என்னை சூழ்ந்து கொள்கிறது". இந்த திரைப்படம் எனது 25 ஆவது படம் என்பதால் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருமுறை சொன்னது போல, நான் சினிமாவில் ஒரு 'காது கேட்காத தவளையாக' மட்டுமே பயணித்து வருகிறேன்.
கும்கி திரைப்படத்தில் "நான் யானையின் கையை பிடித்துக் கொண்டு வந்த பையன். இன்றுவரை ஒவ்வொரு நாளும் சினிமாவில் புதிதாக கற்றுக் கொண்டு வருகின்றேன். " சுற்றியுள்ள எதிர்மறையான விமர்சனங்களையோ, தேவையற்ற அரசியலையோ காதில் வாங்கிக் கொள்ளாமல், உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் , என்று அவர் பேசினார்.
விக்ரம் பிரபு மேலும் பேசுகையில் " நான் சினிமாவுக்கு வரும்போது எனது தந்தை , நான் உனக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் , நீயே அடிபட்டு தான் கற்றுக் கொள்ள வேண்டும்," என்று கூறியிருந்தார். இன்று நான் 25 படங்களை கடந்தும் இதுதான் எனக்கு ஆரம்பம் என்று நினைத்து புத்துணர்வோடு நகர்கிறேன். திரையுலகில் உள்ள அரசியல் , நம்மை கீழே தள்ளிவிட பார்க்கும் நபர்கள் என அனைத்தையும் பார்த்து விட்டேன். அதனால், நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்துகிறேன் , என்று கூறினார். இந்த வெற்றிவிழாவில் படத்தின் நடிகர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , படக் குழுவினர்கள் ஆகியோருக்கு நினைவுப் பரிசு அளிக்கப்பட்டது.