

தமிழக சட்டசபைக்கு தேர்தல் முடிந்து கடந்த 4-ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமனறப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாததால் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முதல் ஆளாக கூட்டணியில் இருந்து விலகி விஜய்க்கு ஆதரவு கொடுத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளதால் தவெகவின் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது.
கடந்த 3 நாட்களாக தமிழக அரசியல் களத்தில் நீடித்த பரபரப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தவெகவிற்கு இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. அதனை தொடர்ந்து ஆளுநர் அர்லேகர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்ததுடன், அவரை முதலமைச்சராக நியமித்து ஆணை வழங்கினார்.
இதையடுத்து கடந்த 10-ம்தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பங்கேற்றார்கள்.
அதனை தொடர்ந்து சுமார் ஒரு வார காலம் துறைகள் அறிவிக்கப்படாமல் இயங்கி வந்த 9 அமைச்சர்களுக்கான துறைகள் கடந்த மே 16-ம்தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இதில் உள்துறை, காவல்துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் உள்ளிட்ட சுமார் 16 முக்கியத் துறைகள் முதலமைச்சர் விஜய்க்கு ஒதுக்கப்பட்டது.
இதில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் ராஜ்மோகனுக்குப் பள்ளிக் கல்வித்துறையும், செய்தி மற்றும் விளம்பரத்துறை, சினிமாத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். ராஜ்மோகனை பலரும் நன்கு அறிந்திருப்பார்கள். சமூக வலைத்தளம், யூட்யூப் பிரபலமாக தொடங்கிய காலத்திலேயே மக்களிடத்தில் நன்கு பரீட்சையமானார். தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகளில் பேச்சாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் கண்ட ராஜ்மோகன் ஒரு கட்டத்தில் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். தனது சரளமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தமிழ் பேச்சால் மக்களிடையே பாராட்டைப் பெற்ற அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வெற்றி பெற்று தற்போது கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில்தான், அமைச்சர் ராஜ்மோகனின் கல்விதகுதி, சொத்து மதிப்பு குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ‘அடுத்த மாதம் வீட்டிற்கு வாடகை பணம் கூட செலுத்த முடியாத ஒரு சாதாரண ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த என்னை, இன்று அண்ணன் விஜய் அமைச்சராக அமர வைத்துள்ளார்’ என மிகவும் உருக்கமாகப் பேசியிருந்தார். தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த வீடியோ தான், இப்போது அவருக்கே வினையாக வந்து முடிந்துள்ளது.
இதுமட்டுமன்றி, அண்மையில் சென்னையில் அவர் சுமார் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள ஒரு பிரம்மாண்டமான சொகுசு வீடு வாங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார். இதில் எது உண்மை என்று கேட்டு அமைச்சர் ராஜ்மோகனின் இந்த இரு வேறு முரண்பட்ட வீடியோக்களையும் ஒன்றாக இணைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.
அதேபோல் அமைச்சர் ராஜ்மோகனின் கல்வித் தகுதி குறித்த விவகாரமும் தற்போது சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. அமைச்சர் ராஜ்மோகன் பயின்றதாகச் சொல்லப்படும் "IIMAT" என்ற கல்வி நிறுவனத்தின் படத்தைப் பகிர்ந்துள்ள சமூக வலைத்தளப் பதிவுகள், ‘இதுதான் தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் படித்ததாகச் சொல்லும் நிறுவனம்’ எனக் குறிப்பிட்டு விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
ராஜ்மோகன் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், 2010-ம் ஆண்டு இந்திய வணிக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIMT) வணிக மேலாண்மை பட்டயப் படிப்பையும் (Diploma), 2018-ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் (Journalism and Mass Communication) இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அமைச்சர் ராஜ்மோகன் தனது எந்தவொரு உறுதிமொழிப் பத்திரத்திலும் தான் பொறியியல் படித்த விபரத்தைக் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. அவர் இன்னும் தனது பொறியியல் பட்டப்படிப்பை அதிகாரப்பூர்வமாக முடிக்காததே இதற்கு முதன்மைக் காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
இந்த குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின்(IIMAT) இணையதளத்தை (Website) ஆய்வு செய்து பார்த்ததில், எந்தவொரு அரசு அமைப்பின் குறைந்தபட்ச அங்கீகாரமும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், உரிய தகுதிகள் இன்றி, பணம் கொடுத்தால் சான்றிதழ் வழங்கும் ஒரு போலி நிறுவனம் இதுவாக இருக்கலாம் என்று பலராலும் கூறப்படுகிறது. மேலும் எதுவுமே படிக்காமல் கூட இங்கே பணம் கொடுத்தால் டிகிரி வாங்கலாம் என்ற அவலநிலையை இந்த நிறுவனம் கொண்டிருப்பதாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த விவகாரம் தற்போது அமைச்சர் ராஜ்மோகனுக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், ‘ஒரு நபர் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகிப்பதற்கு அவர் கண்டிப்பாகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் சட்டப்படியோ அல்லது நடைமுறைப்படியோ இல்லை’ என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், தன்னிடம் இல்லாத ஒரு கல்வித் தகுதியை, இருப்பதாகவோ அல்லது தவறான தகவலாகவோ பொதுவெளியில் முன்வைப்பது முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டு, புதிய அரசின் மீதான தனது கண்டனத்தையும், அரசியல் ஒழுக்கத்தின் அவசியத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோல் நடிகர் விஷாலும், ராஜ்மோகனுக்கு திரைத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது மிகவும் வருத்தமளிப்பதாகவும், திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை, அனுபவம் இல்லாத ராஜ்மோகனிடம் வைப்பது சரியாக இருக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.