

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கேற்ப தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பமும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், ஆட்குறைப்பு என்பது சாதாரண ஒன்றாகி விட்டது.
இந்நிலையில் ஜெர்மனியின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன், வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் 50,000 பேரை பணியில் இருந்து நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது 88 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக, ஜெர்மனியின் டிரெஸ்டன் (Dresden) நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையை மூட முடிவெடுத்துள்ளது. இதற்கு முன்னதாக, பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்ஸல்ஸ் தொழிற்சாலையை கடந்த 2025 பிப்ரவரியில் மூடியது குறிப்பிடத்தக்கது.
வாகன சந்தையில் தற்போது மின்சார வாகனங்களின் வரவு அதிகரித்து இருப்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விற்பனை பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் காரணமாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு பதிலாக, 20 புதிய மாடல் மின்சார கார்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் கார்களில் இருந்து மின்சார வாகனத் தயாரிப்புக்கு மாறுவதற்கு அதிக முதலீடு தேவைப்படுவதால், செலவுகளைக் குறைக்க ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது வோக்ஸ்வேகன் நிறுவனம்.
இந்நிலையில் அடுத்த 4 ஆண்டுகளில் 50,000 பேரை பணியில் இருந்து நீக்க போவதாக வோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் லாபம் கணிசமாக குறைந்ததை அடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் இந்நிறுவனம் இறங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முக்கிய காரணங்கள்:
* கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் லாபம் கடுமையாக சரிந்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் இந்நிறுவனத்ன் நிகர லாபம் சுமார் 44% குறைந்துள்ளது.
* மின்சார வாகன சந்தையில் பிஒய்டி (BYD) போன்ற சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பதால், வோக்ஸ்வேகன் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் விற்பனை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
* அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரிகளும் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வருமானத்தைப் பாதித்துள்ளன.
இந்தப் பணி நீக்கங்கள் முதன்மையாக ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலைகளில் இருக்கும். வோக்ஸ்வேகன் பிராண்ட் மட்டுமின்றி, அதன் கீழ் செயல்படும் Audi, Porsche மற்றும் மென்பொருள் பிரிவான Cariad ஆகியவற்றிலும் இந்த ஆட்குறைப்பு இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்குறைப்பு மூலம் இந்நிறுவனம் ஓர் ஆண்டுக்கு சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
கட்டாய வேலையிழப்புக்கு பதிலாக விருப்ப ஓய்வு மற்றும் இழப்பீட்டுத் தொகையுடன் வெளியேறும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட இருக்கிறது.
மேலும் 2030-ஆம் ஆண்டு வரை எஞ்சியிருக்கும் ஊழியர்களுக்கு வேலை பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.