சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்தோரைக் கைது செய்யவோ அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ போலீசாருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
உலகின் பல நாடுகளில் பாலியல் தொழில் செய்வது முழுக்க முழுக்க தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது. அதேநேரம் சில ஐரோப்பிய நாடுகளில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக அங்கீகரித்து அதற்கு வரியும் வசூலிக்கின்றன. அதன்படி ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கலாச்சாரம், மதம் மற்றும் மனித உரிமைப் பார்வையைப் பொறுத்து பாலியல் தொழிலுக்கான சட்டங்கள் தொடர்ந்து மாற்றமடைந்து வருகின்றன.
ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை. இந்தியாவில் பாலியல் தொழில் தொடர்பான சட்டங்களில் நீண்டகாலமாக குழப்பங்கள் இருந்தது. இந்தக் குழப்பங்களுக்கு தற்போது உச்சநீதிமன்றம் தற்போது மிக முக்கியமான ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.
70 ஆண்டுகள் பழமையான பாலியல் தொழில் தடுப்புச் சட்டத்தை (ITPA) ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்தோர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
ஏனெனில், பாலியல் தொழில் புரிவது என்பது சட்டவிரோதமான செயல் அல்ல. விபச்சார விடுதியை நடத்துவது சட்டவிரோதம் என்றாலும், திடீர் சோதனைகளின்போது அங்கு கண்டறியப்படும், அங்கு விருப்பப்பட்டுத் தங்கியிருக்கும் பெண்களை பாதிக்கப்பட்டவர்களாகக் கருதி, அவர்களைத் துன்புறுத்தவோ அல்லது அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவோ அல்லது அவர்களைக் கட்டாயப்படுத்திக் காவலில் வைக்கவோ சட்டத்தில் இடமில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மேலும் இதுகுறித்து பேசிய நீதிபதிகள், சுய விருப்பத்தின் பேரில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலை அப்பெண்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பட்சத்தில், அவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கக்கூடாது என்றும் சோதனையின் போது அந்த பெண்களை மீட்பு என்ற பெயரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லக்கூடாது என்றும் கூறியுள்ளது. மேலும் போலீசார் இத்தகைய சூழல்களில் மிகவும் கண்ணியத்துடனும், சட்ட விதிகளுக்கு உட்பட்டும் நடக்க வேண்டும் என்றனர்.
பாலியல் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிய நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஈடுபடும் எந்தவொரு பாலியல் தொழிலாளியையும் அவர்களது விருப்பத்திற்கு மாறாக மறுவாழ்வு மையங்களில் சேர்க்கப்படக்கூடாது என்றும், எந்தவொரு மறுவாழ்வுச் செயல்முறையும் கட்டாயப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்காமல், பாலியல் தொழிலாளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
மேலும் மறுவாழ்வு பெறுவதற்கான அரசியலமைப்பு உரிமை, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வைத் தொடர்வதற்கான வழிமுறைகளையும் ஆதரவையும் வழங்க வேண்டிய கடமையை அரசுக்கு உண்டு. இருப்பினும், பாதிக்கப்பட்ட ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக, மறுவாழ்வுச் செயல்முறையை அவர் மீது திணிப்பதற்கு அரசுக்கு அதிகாரம் அளிக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
வணிக ரீதியான பாலியல் சுரண்டலுக்காகக் கடத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் கவலைகளைத் தீர்க்கும் நோக்கில் வழங்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், வயது வந்த பாலியல் தொழிலாளர்களின் மறுவாழ்வு, சமூகத்துடன் மீண்டும் இணைதல் மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் சேர்த்தல் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது, அவர்களின் சம்மதத்துடனேயே நடக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இந்தத் தொழிலில் இருப்பவர்கள் தாங்களாக முன்வந்து உதவி கோரினால் மட்டுமே அரசு தலையிட முடியும் என்றனர்..
மேலும், ரெய்டு நடத்தும் போலீசாருக்கும் சில முக்கியமான அறிவுறுத்தல்களை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதாவது, சோதனைகளின் போது பாலியல் தொழிலாளர்களைக் போலீசார் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தாமல் கண்ணியமாக நடத்த வேண்டும். குறிப்பாக, வயது வந்தவர்கள் தங்களின் தனிப்பட்ட முடிவின்படி செயல்படும்போது, அதில் தலையிட போலீசாருக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
வணிக ரீதியான பாலியல் சுரண்டலுக்காகக் கடத்தப்பட்ட பாதிக்கப்பட்டோருக்கான அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களையும் உத்தரவுகளையும் கோரும் மனு மீதான வழக்கு விசாரணையின்போது வழங்கப்பட்ட இத்தீர்ப்பு, வயதுவந்த பாலியல் தொழிலாளர்களைப் பாதிக்கும் முடிவுகள் அனைத்தும், அவர்களின் ஒப்புதல், சுயநிர்ணய உரிமை மற்றும் ஒவ்வொரு வழக்கின் குறிப்பிட்ட உண்மைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.