
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2ஆம் நாளன்று, ‘பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள்’ (International Sex Workers' Day) கடைப்பிடிக்கப்படுகிறது. பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காகவும் போராடும் ஒரு முக்கியமான நாளாக இந்நாள் கருதப்படுகிறது.
1975ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் நடந்த ஒரு போராட்டத்திலிருந்து, ‘பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள்’ தோற்றம் பெற்றது. அந்த ஆண்டு ஜூன் 2ஆம் நாளில் லியோனில் உள்ள செயிண்ட்- நைசியர் தேவாலயத்தில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள், தங்களின் கொடுமையான வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராகவும், காவல்துறையின் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும், சமூக அங்கீகாரம் மற்றும் உரிமைகளுக்காகவும் போராடினர். அவர்களது போராட்டம் எட்டு நாட்கள் வரை நடைபெற்றது. அதன் பிறகு, பிரான்ஸ் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்தப் போராட்டத்திற்குப் பின்பு, பிரான்சில் பாலியல் தொழிலாளர்களுக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான விழிப்புணர்வு ஏற்பட்டது.
பாலியல் தொழில் (Prostitution) என்பது பணம் அல்லது வேறு வெகுமதிகளுக்காக பாலியற் சேவைகளை வழங்குதல் ஆகும். இதனை, பால்வினைத் தொழில் என்றும் குறிப்பிடுவதுண்டு. இத்தொழிலில் பெரும்பான்மையாக, பெண்களே இருந்து வருகின்ற போதிலும், குறிப்பிடத்தக்க அளவில் ஆண்களும் ஈடுபடுகின்றனர். சிலர், பாலியல் தொழிலைத் தனிநபரின் சுதந்திரமான விருப்பத்தின் அடிப்படையில் ஒரு வேலையாகப் பார்க்கிறார்கள். அதே வேளையில், மற்றவர்கள் இதை சுரண்டல், வன்முறை மற்றும் மனித கடத்தலுடன் தொடர்புடைய ஒரு சமூகப் பிரச்சினையாகக் கருதுகிறார்கள். எனவே, பாலியற் தொழில் என்பது சில ஐரோப்பிய நாடுகளில் சட்டபூர்வமானதாகவும் அரசு மேற்பார்வையிலும் உள்ளது. பெரும்பாலான ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது என்று இருவேறு கருத்துகளைக் கொண்டுள்ளது. சில முஸ்லிம் நாடுகளில், பாலியல் தொழில் மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது. பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடியதாகக் கொண்டு, பாலியல் தொழில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக, பாலியல் தொழிலாளர்களுக்கு உடல்நலம், பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பில் பல சவால்கள் உள்ளன. எச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்ற பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள், உடல் மற்றும் மனரீதியான வன்முறை, சமூகப் புறக்கணிப்பு மற்றும் குற்றவாளிகளால் சுரண்டப்படுதல் போன்றவை, பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளாக இருக்கின்றன.
மொத்தத்தில், பாலியல் தொழில் என்பது ஒரு சிக்கலான, சமூக - பொருளாதார நிகழ்வாகும், இது வறுமை, ஏற்றத்தாழ்வு, பாலின சமத்துவமின்மை மற்றும் மனித உரிமைகள் போன்ற பல ஆழமான பிரச்சினைகளுடன் பிணைந்து இருக்கின்றது. இதை அணுகும் விதம் சமூகத்தின் மதிப்புகள், சட்டக் கட்டமைப்பு மற்றும் மனிதநேய கண்ணோட்டத்தை பிரதிபலிக்கிறது. இது போன்று பல்வேறு கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே, ‘பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.
* பாலியல் தொழிலாளர்களுக்கு மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், மருத்துவ வசதிகள், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு போன்ற அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு வாதிடுதல்.
* பாலியல் தொழிலைச் சுற்றியுள்ள சமூகக் களங்கத்தை அகற்றுவதற்கு முயற்சி செய்தல். பாகுபாட்டை எதிர்த்தல்.
* பாலியல் தொழிலைச் சட்டப்பூர்வமாகவோ அல்லது குற்றமற்றதாக்கவோ செய்ய வேண்டுதல்
* பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுதல்.
என்பது போன்ற சில முதன்மை நோக்கங்களைக் கொண்டு, ‘பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள்’ ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும், பன்னாட்டுப் பாலியல் தொழிலாளர் நாள் கடைப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகளில் பாலியல் தொழில் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக,
* உலகிலேயே முதல் முறையாக, பெல்ஜியத்தில் 2022ஆம் ஆண்டு பாலியல் தொழில் குற்றமற்றதாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும், பாலியல் தொழிலாளர்களுக்கு வேலை ஓப்பந்தம், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு போன்ற உரிமைகளை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
* இந்திய உச்சநீதிமன்றம், 2022ஆம் ஆண்டு, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது. அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஹாங்காங்கில், பாலியல் தொழில் சட்டப்பூர்வமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்களை அடிமையாகக் கொண்டு பாலியல் தொழிலில் ஈடுப்பத்துவதோ, ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொழிலுக்கு உட்படுத்துவதோ, பாலியலில் தொழில் செய்யும் ஒரு பெண் அல்லது வேறு ஒருவர் பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அல்லது ஈர்க்கும் வகையில் செயல்படுவதோ அங்கு சட்டவிரோதமானது என்று இருக்கிறது.
ஹாங்காங்கில் பாலியல் தொழில் புரிவோர் ஒவ்வொரு நகரிலும் உள்ளனர். அவர்களுக்கான விளம்பரச் சேவை செய்யும் பத்திரிகைகள், நாளிதழ்கள் என நூற்றுக்கணக்கில் உள்ளன.
அன்றாடச் செய்தித்தாள்களில் வரும் விளம்பரச் சேவையில் பெரும்பகுதி பாலியல் தொழிலாளர்களின் விளம்பரச் சேவையாகவே இருக்கின்றன. இத்தொழிலுக்கான விளம்பரம் செய்வோர், தமது மார்பின் அளவு, உடம்பின் அளவு, நிறை, உயரம், வயது, பேசும் மொழி, விலை போன்றவற்றைக் குறித்திருப்பதுடன் அவர்களது கவர்ச்சியான புகைப்படங்களையும் இணைத்திருப்பர். இணையத்திலும் இவர்களுக்கான சட்டப்பூர்வமான விளம்பரத் தளங்கள் பல உள்ளன.
ஹாங்காங் அரசாங்கம் பாலியல் தொழிலாளர்கள் இணையத்தளங்களின் ஊடாக விளம்பரப்படுத்திக் கொள்வதற்கான சட்டப்பூர்வமான அனுமதியையும் வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 52 மில்லியன் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக பாலியல் தொழிலாளர்களின் சர்வதேச ஒன்றியம் தெரிவிக்கிறது. பெரும்பான்மையான நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் சமூகக் களங்கமாகக் கருதப்பட்டு ஒதுக்கப்படுகின்றனர். பாலியல் தொழிலை அனைத்து நாடுகளிலும் ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும். பாலியல் தொழிலாளர்களுக்கு, மற்ற தொழிலைப் போன்று அனைத்து சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு தகுந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருவது, அனைத்து நாடுகளின் கவனத்திற்குரியதே.