வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க / திருத்த தேர்தல் ஆணையத்தின் எளிய வழிகாட்டுதல்..!

இணையதளம் அல்லது செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது ஆகியவற்றை நீங்கள் செய்ய முடியும்.
Voter ID|வாக்காளர் பட்டியல்
Voter ID|வாக்காளர் பட்டியல்AI Image
Updated on

வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை மேம்படுத்தவும், தகுதியுள்ள வாக்காளர்களின் தகவல்களை ஒழுங்குபடுத்தவும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2003-ம் ஆண்டிற்குப் பிறகு, கடந்த ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (SIR) என்ற திருத்தப் பணியை மேற்கொண்டது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (SIR)பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், தமிழ்நாட்டில் சுமார் 73.37 லட்சம் பேர் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டனர். இதன் மூலம், தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,73, 43,291 ஆக உள்ளது.

தற்போதைய புதிய பட்டியலில் உள்ள 5.73 கோடி வாக்காளர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள். 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள். 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.

இதற்கிடையே தமிழகத்தில் தீவிர திருத்தத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்க்க விருப்புபவர்கள், திருத்தம் செய்ய விருப்புபவர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தில் அல்லது செல்பேசி செயலியைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

இணையதளம் அல்லது செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது ஆகியவற்றை நீங்கள் செய்ய முடியும்.

இடம் பெயர்தல், திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்து போதல் ஆகிய காரணங்களுக்காக மாற்று புகைப்பட அடையாள அட்டை பெற வேண்டியிருப்பின் வட்டாட்சியர் / மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

அதேசமயம் வாக்காளர் பட்டியலில் பெயரை புதிதாகச் சேர்க்க விரும்புபவர்கள் இனி விண்ணப்பத்தை வழக்கம்போல் நிரப்பினால் மட்டும் போதாது. தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையின்படி, புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

Election commission|வாக்காளர் பட்டியல்
Election commission |வாக்காளர் பட்டியல்

பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணையவும், முதல் முறையாக புதிய வாக்காளராக பதிவு செய்ய விரும்புபவர்களும் படிவம்–6 மூலம் விண்ணப்பிக்கலாம். அதன்படி புதிய விண்ணப்பதாரர்கள் தங்களது பெற்றோரின் SIR தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும். அதாவது, வாக்காளர் பட்டியல் பெயரை சேர்க்க விரும்பும் புதிய விண்ணப்பதாரர்கள் படிவம் 6 உடன் தங்கள் பெற்றோரின் SIR விவரங்களையும் கட்டாயம் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் படிவம்–6 நிரப்பும்போது, இதற்கென இணைக்கப்பட்டுள்ள 'பிரகடனப் படிவத்தை' கட்டாயமாக பூர்த்தி செய்தால்தான் விண்ணப்பத்தை அடுத்த கட்டத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
வாக்காளர் அடையாள அட்டை உருவானது எப்படி தெரியுமா?
Voter ID|வாக்காளர் பட்டியல்

இதில் பெற்றோரின் பெயர், சட்டமன்றத் தொகுதி எண், வாக்குச்சாவடி எண் மற்றும் வரிசை எண் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படுகின்றன. அதேசமயம் பெற்றோரின் SIR விவரங்கள் இல்லாதவர்களுக்கு மாற்று விருப்பமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின் மூலம் வாக்காளர் விவரங்கள் மேலும் துல்லியமாக பராமரிப்பதுடன், ஆவணங்கள் சமர்ப்பிக்கும் தேவையையும் குறைப்பதே நோக்கமாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், புதிய வாக்காளர்கள் விண்ணப்பங்களை முழுமையான தகவல்களுடன் சமர்ப்பிக்குமாறும், தவறான அல்லது முழுமையற்ற விவரங்கள் பரிசீலனையில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள விரும்புவோர், தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தில் அல்லது செல்போன் செயலியைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இணையம் மூலம் செய்ய இயலவில்லை என்றால் ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை அதனுடன் இணைத்து சமர்பிக்கலாம் எனவும் தெரிக்கப்பட்டுள்ளது

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சேவைகளுக்கான இணையதளமான voters.eci.gov.in என்ற இணைய தள பக்கத்திற்கு சென்று இவற்றை நீங்கள் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்! – இந்த 12 ஆவணங்களில் ஒன்று இருந்தாலே போதும்..!
Voter ID|வாக்காளர் பட்டியல்

பெயர் நீக்கம், வாக்காளர் அட்டையில் உள்ள விவரங்கள் திருத்தம் ஆகியவற்றுக்கு EPIC எண் அவசியம். இது ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட வாக்காளருக்கும் வழங்கப்படும் ஒரு தனித்துவமான எழுத்து மற்றும் எண் கலந்த அடையாளங்காட்டியாகும்.

logo
Kalki Online
kalkionline.com