
பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் தொழிற்துறை வேலைவாய்ப்புகளைப் பெறும் போது, அதுகுறித்த போதிய திறன் இல்லாமல் இருக்கின்றனர். ஏட்டுக் கல்விக்கும், தொழிற்கல்விக்கும் இடையே உள்ள இந்த அதிக வித்தியாசத்தைக் குறைக்க ஏஐசிடிஇ நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழிற்கல்வித் திறனைப் பெற முறையான பயிற்சிகள் அவசியம். இந்தப் பயிற்சிகள் இல்லாத நிலையில், பல நிறுவனங்கள் பட்டதாரிகளைப் பணியில் அமர்த்த தயங்குகின்றன. இதன் காரணமாகவே பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சியை அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் தொழிற்பயிற்சி வழங்கும் பேராசிரியர்களுக்கும் தொழிற்கல்வி குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பது தொழிற்பயிற்சியை பாதிக்கிறது. ஆகையால் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1 இலட்சம் உதவித் தொகையுடன் பயிற்சியளிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (AICTE) முடிவு செய்துள்ளது.
பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ‘தொழில்துறை ஊக்குவிப்புத் திட்டம் எனும் புதிய திட்டத்தை ஏஐசிடிஇ தற்போது அறிமுகம் செய்துள்ளது. தொழிற்துறைக்குத் தேவையான திறன்கள் மிகுந்த பட்டதாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் தொழில் நிறுவனங்கள் கடும் சிரமத்தைச் சந்திக்கின்றன. இந்நிலையில் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிப்பதோடு, பேராசிரியர்களுக்கும் பயிற்சி அவசியம் என ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது.
இதன்படி வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொழில் நிறுவனங்களில் பேராசிரியர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பேராசிரியர்கள் தொழிற்துறை குறித்த திறன் மிகுந்திருந்தால், மாணவர்களுக்கு அதனைப் பயிற்றுவிப்பது எளிதான காரியம். தொழிற்துறை ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் பமிற்சி பெற https://ifp.aicte.gov.in என்ற இணையத்தளத்தில் வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் பேராசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
1. தொழிற்துறை ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 2025-26 கல்வியாண்டில் மட்டும் சுமார் 300 பேராசிரியர்களுக்கு நேரடி தொழிற்பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2. அடுத்த 3 அல்லது 5 ஆண்டுகளில் பயற்சி பெறும் பேராசிரியர்களின் எண்ணிக்கையை 1,500 ஆக உயர்த்தும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
3. பயிற்சி பெறும் பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ சார்பில் மாதந்தோறும் ரூ.75,000 மற்றும் தொழில் நிறுவனம் சார்பில் ரூ.25,000 என ஒரு மாதத்திற்கு ரூ.1,00,000 உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-10-2025
பயிற்சி தொடங்கும் நாள்: 01-12-2025