

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே உட்சக்கட்ட போர் மூண்டுள்ளது. ஆபரேஷன் ரோரிங் லயன் (Operation Roaring Lion) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாக்குதலில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம்தேதி, ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், ராணுவத் தளங்கள் மற்றும் விமான நிலையங்களை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இதற்கு ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஈரானின் மீதான தாக்குதல் மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என அதிபர் டிரம்ப் இன்று காலை அறிவித்துள்ளார். ஈரான் மீதான வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் கமேனி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இந்தத் தாக்குதலின் எதிரொலியாக ஈரானில் முழுமையாக மின்சாரம் நிறுத்தப்பட்டதுடன், இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யில் 80% இந்த பகுதி வழியே தான் வரும். ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடமாகவும் பார்க்கப்படுகிறது. தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தை மூடி விடுவோம் என்று ஈரான் நீண்டகாலமாகவே எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தற்போது மூடியுள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80 USD வரை அதிகரித்துள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் இதன் விலை 100 USD ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 165 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பள்ளிகள் மீதான இந்த தாக்குதலுக்கு ‘மனித உரிமை மீறல்’ யுனெஸ்கோ நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தாக்குதல்கள் தொடர்கின்றன. துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரத்தின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக துபாயில் உள்ள அமேசான் டேட்டா சென்டர் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதால் கிளவுட் இணைய சேவை பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் போரால் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் ஹோம் கமிங்’-கை தொடங்கியுள்ளது மத்திய அரசு
ஈரான் மீதான தாக்குதல் குறித்து பேசிய அமெரிக்கா அதிபர் டிரம்ப், “மீண்டும் அமெரிக்கா சக்தி வாய்ந்த நாடாக மாறியுள்ளது. ஈரானின் ராணுவ தலைமை முற்றிலுமாக ஒழிந்து விட்டது. ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி மறைவுக்கு அந்நாட்டு மக்கள் பலரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேரை போலீசார் சுட்டு வீழ்த்தியுள்ளனர். மேலும் நான்கு வாரங்களுக்கு ஈரானின் மீதான தாக்குதல் தொடரும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.