

கடந்த நவம்பர் 12ஆம் தேதி சீனாவில் உள்ள ஒரு கோயிலின் துணைக் கட்டிடம் தீக்கிரையானது. சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை புரியும் இந்த கோயில் தீயில் எரிந்து சாம்பலானது, நாட்டு மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோயிலில் தீ பற்றியது எப்படி என்பது குறித்த முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. சீன நாட்டின் ஜியான்சு மாகாணத்தில் பென்குவாங் மலை உள்ளது. இந்த மலையில் சீனாவின் பாரம்பரிய கோயில்கள் பல உள்ளன. அதில் ஒன்று தான் வென்சாங் பெவிலியனில் உள்ள ஒரு கோயில்.
இந்தக் கோயிலில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி தீ பற்றிய நிலையில், தீயை அணைக்க கோயில் நிர்வாகிகளும், பக்தர்களும் கடுமையாக போராடினர். இருப்பினும் ஒரு சில மணி நேரங்களிலேயே, 3 மாடிகள் கொண்ட கோயிலின் துணைக் கட்டிடம் தீயில் எரிந்து சாம்பலானது. தீயில் எரிந்த கோயில் தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின.
கிறிஸ்து பிறப்புக்கு பின், கடந்த 536 ஆம் ஆண்டு சீனாவில் இந்தப் பாரம்பரிய கோயில் எழுப்பப்பட்டது. மேலும் சீனாவின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு கலை வேலைப்பாடுகளுடன் இந்தக் கோயிலின் துணைக் கட்டிடம் கடந்த 2009 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. சீன மக்கள் உள்பட, சுற்றுலா பயணிகளும் இந்த கோயிலுக்கு தினசரி வந்து செல்கின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள், மெழுகுவர்த்தி மற்றும் ஊதுபத்தி ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாக அனைத்து கோயில்களிலும் ஊதுபத்தியை ஏற்றுவதற்கு என்று தனியாக ஒரு இடம் இருக்கும்.
ஆனால் கடந்த நவம்பர் 12ஆம் தேதி சுற்றுலா பயணிகள் சிலர், எளிதில் தீப்பற்றக் கூடிய இடத்தில் ஊதுபத்தி மற்றும் மெழுகுவத்தி ஏற்றியதால் தான், கோயிலின் துணைக் கட்டிடம் தீப்பற்றியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் பழமையான வென்சாங் பெவிலியனில் உள்ள கோயிலின் துணைக் கட்டிடம், சீனாவின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலித்து வந்தது. இந்நிலையில் இந்த கோயிலின் துணைக் கட்டிடம் தீக்கிரையானதால், சீன மக்கள் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த தீ விபத்தால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பதும், காட்டுப் பகுதிக்கு இந்தத் தீ பரவாததும் நல்ல விஷயமாக பார்க்கபபட்டது. மேலும் துணை கட்டிடம் எறிந்ததால் கோயிலுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், துணை கட்டிடத்தில் எவ்வித கலாச்சார ஆவணங்களும் இல்லை எனவும் கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.