

இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஏழுமலையான் கோவில். இந்த கோவிலில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி கோவிலில் பலதரப்பட்ட மக்களும் திருமணம் போன்ற முக்கிய சடங்குகளை இங்கு வைத்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருப்பதி கோவிலில் பலதரப்பட்ட மக்களுக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கனவும், ஆசையும் இருக்கும். ஆனால் திருப்பதியில் திருமணம் செய்ய வேண்டும் என்றால் அதிகம் பணம் கட்டணமாக செலுத்த வேண்டுமோ என்ற கேள்வியும், சந்தேகமும் பலரது மனதில் உள்ளது. ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணம் செய்ய கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை, முற்றிலும் இலவசம் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆமாங்க.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை, கடந்த 15 ஆண்டுகளாக திருமலையில் உள்ள கல்யாண மண்டபத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை இந்துக்களுக்கு இலவசமாக திருமணங்களை நடத்தி வைப்பதுடன் காது குத்துதல் போன்ற முக்கியச் சடங்குகளுக்கு குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கிறது. இதுவரை ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமலையில் திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் திருப்பதியில் திருமணம் செய்ய சில விதிமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் கடைபிடித்து வருகிறது. அந்த வகையில் திருப்பதியில் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணிற்கு 18 வயதும், ஆண்ணுக்கு 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் இங்கு காதல் திருமணங்கள் மற்றும் இரண்டாவது திருமணம் செய்ய விரும்புவோருக்கு அனுமதி இல்லை.
திருமணத்திற்கு மணமக்களின் பெற்றோர் கண்டிப்பாக வர வேண்டும். இல்லையென்றால், அவர்கள் ஏன் வரவில்லை என்பதற்கான சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பொருளாதார வசதி இல்லாத தம்பதிகளுக்கு மட்டுமே திருமணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணங்கள் தொடர்ந்து இலவசமாக நடத்தப்படும் என்றும், காது குத்துதல் போன்ற முக்கியச் சடங்குகள் முறைப்படி நடைபெறும் என்றும் மக்களின் வசதிக்காக அந்தச் சேவைகளை குறைந்த கட்டணத்தில் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தற்போது அறிவித்துள்ளது.
திருமணச் சடங்குகள் இலவசமாக நடத்தப்பட்டாலும், உணவு ஏற்பாடுகள் மற்றும் மலர் அலங்காரங்கள் போன்ற பிற ஏற்பாடுகளுக்கான செலவுகளை சம்பந்தப்பட்ட குடும்பங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.
திருமணத்திற்கு இலவசம், பெயர் வைக்க ரூ.200, காது குத்து ரூ.50, மேளம் (ஒரு செட்) ரூ.100, மேளம் (இரண்டு செட்) ரூ.300, பிற சமயச் சடங்குகள் ரூ.200 என்று மிகவும் குறைந்த கட்டணத்தில் திருப்பதியில் சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்தச் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள, பக்தர்கள் திருமலையில் உள்ள கல்யாண வேதிகாவில் அமைந்துள்ள அர்ச்சகர் சங்கத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திங்கட்கிழமை (ஜனவரி 9-ம்தேதி) முதல், திருமலையில் உள்ள பாபவிநாசம் சாலையில் அமைந்துள்ள விசாலமான கல்யாண வேதிகையில், பக்தர்களுக்குத் தேவையான பல்வேறு பாரம்பரிய சடங்குகள் மற்றும் பூஜைகளை, புரோகித சங்கம் (அர்ச்சகர் சங்கம்) மூலம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த கட்டணத்தில் நடத்த உள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் இலவசத் திருமணங்களுக்குப் பல்வேறு தரப்பினரும் பெரியளவில் ஆதரவும், வரவேற்பும் அளித்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு முதல் திருப்பதியில் இலவசத் திருமணச் சேவை நடைபெற்று வரும் நிலையில், இது இனிவரும் காலங்களிலும் இலவச திருமணங்கள் தொடரும் என்றும் மற்றச் சேவைகளும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என்றும் தேவஸ்தானத்தின் இணை செயல் அலுவலர் வீர பிரம்மம் கூறினார்.