அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்த டிரம்ப், இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரி விதித்தார். அத்துடன் நிறுத்தாமல் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக கூடுதலாக 25 சதவீத வரி என அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்பாடு செய்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் தற்போது பேச்சுவார்த்தை முடிந்து இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே ஒரு மிக முக்கியமான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் உறுதியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இணைந்து வரலாற்று சிறப்பு மிக் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது பற்றி இருநாடுகளும் கூட்டு அறிக்கையையும் வெளியிட்டு இருக்கின்றன. அதன்படி செயல் திட்டத்தின்படி இடைக்கால சட்டப்பூர்வ ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு மார்ச் மாதம் இருநாடுகளும் கையெழுத்து போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், விவசாயிகள் நலன் பெறுவர், அமெரிக்கா போன்ற ஒரு பெரிய சந்தையில் பொருட்களை விற்கும் வாய்ப்பை இந்திய வர்த்தகர்கள் பெறுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும், இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் 30 டிரில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,717 லட்சம் கோடி என்ற மாபெரும் சந்தை இந்திய விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு தடையின்றி திறக்கப்படுவதால் அமெரிக்கவுடனான வர்த்தக உபரி மேலும் அதிகரிக்க இது வழிவகுக்கும்.
மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய பொருட்களுக்கான வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைக்கும். தற்போது இது 50 சதவீதமாக இருக்கும் நிலையில் 25 சதவீதமாக கடந்த 7-ம்தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் நமக்குக் கிடைக்கும் சாதக பாதகங்களை இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?
* அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து தொழில்துறை பொருட்கள், பெரும்பாலான உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கு, அதாவது உலர் தானியங்கள், சோயாபீன் எண்ணெய், கால்நடை தீவனத்துக்கான சிவப்பு சோளம், பாதாம், பதப்படுத்தப்பட்ட பழங்கள், முந்திரி போன்ற கொட்டைகள் வகைகள், ஒயின் மற்றும் மதுபானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி ரத்து செய்யப்படும்.
* அமெரிக்காவின் இந்த வரிக்குறைப்பால் இனிமேல் ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் காலணிகள், பிளாஸ்டிக், ரப்பர், ஆர்கானிக் வேதிப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான வரி 18 சதவீதம் மட்டுமே..எனவே இந்த வரி குறைவு காரணமாக வங்கதேசம், வியட்நாம், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா போட்டி போட முடியும்.
* அதேபோல் உயிர் காக்கும் மருந்துகள், ரத்தினங்கள், வைரங்கள், விமான பாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்கச் சந்தையில் நம் நாட்டுப் பொருட்களின் விலை குறையும் என்பதால் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும்.
* இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் உயிர் காக்கும் மருந்துகளுக்கு பூஜ்ய வரி விதிக்கப்படும். இது ஐதராபாத் மற்றும் குஜாரத்தில் உள்ள மருந்து நிறுவனங்களுக்கு மிகப்பெரிய லாபத்தை தரும். அமெரிக்காவின் மிகப்பெரிய தேவையாக இருக்கும் வைரம் மற்றும் ஆபரணங்களுக்கு வரி விலக்கு அளிப்பதன் மூலம், இந்த துறையில் லட்சக்கணக்கான இந்திய கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
* இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் ஜவுளி, தோல் பொருட்கள், காலணிகள் மற்றும் கைவினைப்பொருடகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதனால் தமிழகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்ப கிடைத்து இருக்கிறது.
* கணினி சிப்கள், செமி கண்டக்டர்கள் மற்றும் தரவு மையத் தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதால் இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா மற்றும் பாதுகாப்பு துறை தயாரிப்புகள் உலக தரத்திற்கு உயரும்.
வேலைவாய்ப்பு பெருகும்
* இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்றுமதி செய்ய வேண்டிய பொருட்களைத் தயாரிக்க அதிக ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பதால், திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களில் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய அளவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
* இந்த ஒப்பந்தத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பல பொருட்களுக்கு சலுகை அளித்தாலும், குறிப்பாக அரிசி, கோதுமை, சோளம் மற்றும் பால் பொருட்களுக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை என்பதால் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய பொருட்களுக்கு எந்தப் பாதிப்பும் வராத வகையில் இந்த ஒப்பந்தம் பாதுகாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் விமான உதிரிபாகங்கள் அமெரிக்காவிற்கு வரி இல்லாமல் ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஒப்பந்தம் மூலம் போயிங் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் உற்பத்தி ஆலைகளை விரிவாக்க தூண்டுதலாக அமையும் என்பதுடன் அதிக முதலீடுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் அதிகளவு நன்மைகள் இருக்கும் அதேவேளையில் சில பாதிப்புகள் மற்றும் சவால்களும் இருக்கின்றன.
* அதாவது இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் சந்தை திறக்கப்பட்டுள்ளது என்றாலும், அமெரிக்கச் சந்தை மிகவும் கடுமையான தரக்கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது. இப்போது வரி குறைந்தாலும், நம் நாட்டு ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக சிறு தொழில்கள் மற்றும் விவசாயிகள் அமெரிக்கா எதிர்பார்க்கும் மிக உயர்ந்த தரத்திற்குத் தங்கள் பொருட்களை உயர்த்த வேண்டியிருக்கும் என்பதால் அதற்கு கண்டிப்பாக கூடுதலாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மிக உயர்ந்த தரம் இல்லை என்றால் அந்த பொருட்கள் திருப்பி அனுப்பப்படும் அபாயம் உள்ளது.
* குறைந்த விலையில் மருந்துகளைத் தயாரிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில் அமெரிக்காவில் மருந்துப் பொருட்கள் துறையில் கடுமையான காப்புரிமை விதிகள் நடைமுறையில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க நிறுவனங்களின் காப்புரிமை விதிகளுக்கு இந்தியா அதிகம் இணங்க வேண்டியிருக்கும் என்பதால் எதிர்காலத்தில் சில மருந்துகளின் விலை உயர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.