

அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், இந்தியர்களைப் புகழ்ந்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திறமை வாய்ந்த இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்து இருப்பதாக, எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்ல தனது மனைவியும் இந்திய பூர்வீகத்தைச் சேர்ந்தவர் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களின் திறமையை மதிக்கும் விதமாக தனது மகன் பெயரில், இந்தியர் ஒருவரின் பெயரை சேர்த்துள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் எலான் மஸ்க் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியின் போது தான், இந்தியர்களால் அமெரிக்கா எந்த அளவிற்கு பயன்பெற்றுள்ளது என்பதைப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
எலான் மஸ்க் மேலும் கூறுகையில், “எங்கள் நாட்டில் குடியேறிய இந்தியர்களால், அமெரிக்கா மிகப்பெரும் பலன்களைப் பெற்றது. இந்தியர்களின் திறமையை அமெரிக்கா மதித்ததே இதற்கு முழு முதல் காரணம். எனது மனைவியான ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான். இவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், இந்திய பூர்வக்குடியில் பிறந்தவர். இதுபற்றிய முழு விவரங்கள் எனக்குத் தெரியாது.
மேலும் நோபல் பரிசைப் பெற்ற இந்திய-அமெரிக்கரான சுப்ரமணியன் சந்திரசேகரை எனக்கு மிகப் பிடிக்கும். அவரின் நினைவாகத் தான் என்னுடய மகன் பெயரில் ஒரு பகுதியை ‘சந்திரசேகர்’ என சூட்டினேன். இந்தியாவுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. இந்த உறவு மேலும் வலிமை அடைய வேண்டும் என்பதே என் எண்ணம்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் ஆட்சி செய்த போது, எல்லைக் கட்டுப்பாடுகள் பெரிதளவில் இல்லாமல் இருந்தது. இதனால் அனைத்து நாட்டினருக்குமே முழு சுதந்திரம் கிடைத்தது. இருப்பினும் இது போன்ற வரம்பற்ற கட்டுப்பாடுகள், அமெரிக்காவில் சட்டவிரோதமான குடியேற்றத்தையும் ஊக்குவித்தது. H1-B விசாவில் இருந்த சில விதிமுறைகள், எனக்கு சரியாகப் படவில்லை. இருப்பினும் H1-B விசாவை முழுமையாக நிறுத்த வேண்டும் என நான் நினைத்ததில்லை.
திறமையானவர்களுக்கு என்றுமே பற்றாக்குறை இருக்கும். திறமையானவர்களை கண்டுபிடிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இருப்பினும் இன்னும் திறமையான நபர்கள் அமெரிக்காவிற்கு தேவை” என மஸ்க் கூறினார்.
வானியல் விஞ்ஞானியான சுப்ரமணியன் சந்திரசேகர், ஐக்கிய அமெரிக்கா மற்றும் சிக்காகோவில் தான் பல ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் கடந்த 1910 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவில் இருந்த லாகூரில் பிறந்தார். கடந்த 1983 ஆம் ஆண்டு விண்மீன்கள் தொடர்பான ஆய்விற்காக இவருக்கும், வில்லியம் ஃபௌலருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
எலான் மஸ்க் மற்றும் ஷிவோன் ஜிலிஸ் ஆகியோருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில் இவர்களுக்கு ஒருமுறை செயற்கை கருத்தரிப்பு முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அப்போது பிறந்த ஆண் குழந்தைக்கு ‘ஸ்டிரைடர் சந்திரசேகர்’ எனவும், பெண் குழந்தைக்கு ‘அசூர்’ எனவும் பெயர் சூட்டினர்.
மறைந்த இந்திய விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர் நினைவாகவே, மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் எனப் பெயர் சூட்டியுள்ளார். மேலும் இவர் தனது மகனை செல்லமாக ‘சேகர்’ என்று தான் அழைப்பாராம்.