
பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இது நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் ஒரு முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாகவும், சந்தோஷமாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள 2.21 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது.
தொடக்கத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரை கிலோ பச்சை அரிசி, 20 கிராம் பருப்பு, வெல்லம், ஏலக்காய், கரும்பு, முந்திரி திராட்சை போன்றவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டம் விரிவடைந்து வருகிறது. வரும் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று என்ன பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் பொங்கலுக்கும் பரிசுத் தொகுப்புடன்,
களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு புதிய பானையையும், ஒரு புதிய அடுப்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம், அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர்.
ஏனெனில் வரும் 2026ம் ஆண்டு மே மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த முறை பொங்கல் பரிசு பெரியளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. கடந்த ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 கொடுக்கப்பட்டு வந்த நிலையில், திமுக அரசு பொங்கல் பரிசுடன் ரொக்க பணம் வழங்குவதை நிறுத்தியது. இந்நிலையில், வரும் 2026-ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருப்பதால், இந்த முறை ரொக்கப் பணமும் சேர்த்து வழங்கப்படுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
இந்த சூழலில்தான், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சென்னையில் ஒரு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
புதிய அரிசியை அறுவடை செய்து, புது பானையில் பொங்கலிடுவதுதான் நமது பாரம்பரியம். எனவே, பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன், களிமண்ணால் ஆன ஒரு புதிய பானையையும், ஒரு புதிய அடுப்பையும் அரசு கொள்முதல் செய்து, விலையில்லாமல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்று அந்த சங்கம் கூறியுள்ளது.
எனவே 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பரிசுத்தொகுப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.