

குறுஞ்செய்தி அனுப்பும் செயலியாக அறிமுகமான வாட்ஸ் அப், தற்போது உலகின் மிகவும் பிரபலமான தகவல் தொடர்பு தளங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத செயலியாக மாறியுள்ள வாட்ஸ் அப்பை இந்தியாவில் மட்டும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த செயலியை உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி, காணொளி, புகைப்படம், காணொளி அழைப்புகள், ஒலிப்பதிவு மற்றும் குரல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குவதால் இந்த தளம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் தனிப்பட்ட பயன்பாடுகள் என பல்வேறு துறைகளில் தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய தளமாக வாட்ஸ் அப் திகழ்கிறது. தனிநபர் உரையாடல்கள் மட்டுமின்றி, குழு உரையாடல்களுக்கும் இந்த செயலி பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ் அப், பயனர்களை கவரவும், தகவல் தொடர்பை மேலும் எளிமையாக்கும் நோக்கிலும் பல்வேறு புதுப்புது மேம்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தனது பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில், வாட்ஸ்அப்பில் உங்கள் மொபைல் எண்ணைப் பகிராமல், யூசர் நேம் (Username) மூலம் மட்டுமே பிறருடன் சாட் செய்யும் புதிய பாதுகாப்பு அப்டேட் விரைவில் அறிமுகமாகியுள்ளது.
வாட்ஸ் அப்பை பொறுத்தவரை தற்போது மொபைல் எண் பகிர்ந்தால் மட்டுமே இன்னொருவரை தொடர்பு கொள்ள முடியும். ஆனால் விரைவில் வரப்போதும் புதிய வசதி மூலம் இனி உங்கள் போன் நம்பரை யாருக்கும் தராமலேயே வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்ய முடியும். 'யூசர் நேம்' மூலம் மொபைல் எண்ணை பகிராமல் பிறருடன் தொடர்பு கொள்ள முடியும். இது தனியுரிமையை மேலும் பாதுகாக்கும் வகையில் இந்த புதிய அம்சம் இருக்கும் என்பதால் பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வாட்ஸ்அப்பை ஒரு 'சூப்பர்ஆப்' ஆக மாற்றவும், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையில் அதன் பங்கை அதிகரிக்கவும் மெட்டா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அம்சமாகவே புதுப்புது அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
இதுவரை வாட்ஸ்அப்பில் ஒருவருடன் பேச வேண்டும் என்றால், மொபைல் எண் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இனி இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களைப் போல ஒரு தனித்துவமான ‘யூசர் நேம்’ உருவாக்கிக் கொள்ளலாம்.
பெரிய குரூப்களிலோ அல்லது புதிய நபர்களுக்கு மெசேஜ் அனுப்பும்போதோ உங்கள் போன் நம்பர் யாருக்கும் தெரியாது. பயனர் விரும்பினால் மட்டுமே தொலைபேசி எண்ணை பகிரலாம். அதனால் எண் பாதுகாப்பாக இருக்கும்.
உங்களுக்குத் தெரியாத புதிய நபர்களுக்கு நீங்கள் முதன்முதலில் மெசேஜ் அனுப்பும்போது, உங்கள் போன் நம்பர் மறைக்கப்பட்டு யூசர் நேம் மட்டுமே காட்டப்படும்.
நாம் உருவாக்கும் யூசர்நேம் 3 முதல் 35 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும். மற்ற சமூக ஊடகங்களைப் போல வாட்ஸ்அப்பில் யாரையும் யூசர் நேம் கொண்டு தேடிக் கண்டுபிடிக்க முடியாது. துல்லியமான யூசர் நேம் தெரிந்தால் மட்டுமே மற்றவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள முடியும்.
புதியவர்கள் உங்களைத் தொடர்புகொள்வதைக் கட்டுப்படுத்த 'யூசர் நேம் கீ' என்ற கூடுதல் பாதுகாப்பு வசதியும் உண்டு. அதேபோல் நீங்கள் முன்பின் தெரியாதவர்களுடன் உரையாடலைத் தொடங்க, இந்த 'கீ' (Key) குறியீட்டைப் பயன்படுத்தலாம். இந்த ‘கீ’ (Username Key) இருந்தால் மட்டுமே அவர்கள் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் போல அனைவரின் பெயரையும் தேட முடியாது. உங்களைத் தொடர்புகொள்ள உங்கள் முழு யூசர் நேமும் தெரிந்திருக்க வேண்டும். இந்த புதிய அப்டேட்டை பெற வாட்ஸ்அப் வெர்ஷனின் புதிய அப்டேட் இருக்க வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்வது எப்படி?
உங்கள் வாட்ஸ்அப் செயலியை சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்யவும். வாட்ஸ்அப் செட்டிங்ஸ் (Settings) > அக்கௌன்ட் (Account) பகுதிக்குச் செல்லவும். யூசர் நேம் (Username) என்பதைத் தேர்ந்தெடுத்து உங்களுக்குப் பிடித்த பெயரை முன்பதிவு (Claim) செய்து கொள்ளலாம்.
உலகம் முழுவதும் வாட்ஸ்அப்பில் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளதால், ஒரே மாதிரியான பெயர்கள் பலருக்கு இருக்க வாய்ப்புள்ளது.
எனவே, தங்களுக்குப் பிடித்த பெயர்களைப் பயனர்கள் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வாட்ஸ்அப் அனுமதி அளித்துள்ளது.
நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் பெயர்களை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, சில முக்கிய பெயர்களை வாட்ஸ்அப் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் இருக்கும் தங்களின் அதே யூசர்நேம்களை வாட்ஸ்அப்பிலும் பயன்படுத்திக் கொள்ள வணிக நிறுவனங்களுக்கும், படைப்பாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவு இந்த வாரம் முதல் தொடங்குவதால் பயனர்கள் தங்களுக்கான பயனர் பெயரை (Username) முன்பதிவு (Reserve) செய்யலாம். யூசர் நேம் வசதியுடன் சாட்டிங் செய்யக்கூடிய வசதி, இந்த ஆண்டின் பிற்பகுதியில் படிப்படியாக அனைத்துப் பயனர்களுக்கும் முழுமையாகக் கிடைக்கும் என்று வாட்ஸ்அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் வாட்ஸ்அப்பில் WhatApp Plus என்ற புதிய சந்தா சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாதம் வெறும் ரூ.79 செலுத்தி WhatApp Plus சேவையை பெறலாம். முதல் மாதம் மட்டும் இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பிரத்தியேக ஸ்டிக்கர்கள், தனிப்பயன் செயலி ஐகான், செயலி தீம் மாற்றம், பிரத்தியேக ரிங்டோன்கள், கூடுதல் சாட்களை பின் செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
Custom Chat Lists கூடுதல் அம்சங்களையும் WhatApp Plus சத்தாதாரர்கள் பயன்படுத்தலாம்.