

உலகளவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருவதால், அதை இயக்கும் சாதனங்கள், செயலிகள் மற்றும் மென்பொருள்களும் அவற்றிற்கு ஏற்றவாறு மாறி வருகின்றன. புதிய தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுக்கும், அதே நேரத்தில் பழைய சாதனங்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பது செயலி தயாரிப்பாளர்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது.
இந்நிலையில், WABetaInfo-வின் அறிக்கையின்படி, வரும் செப்டம்பர் 8, (2026) முதல், ஆண்ட்ராய்டு 6.0-க்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் சாதனங்களில் வாட்ஸ்அப் இனி செயல்படாது. அதாவது, ஆண்ட்ராய்டு 6.0க்கு குறைவான இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களில் இனி வாட்ஸ் அப் செயல்படாது என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது, ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் இயங்கும் சாதனங்களுக்கு வாட்ஸ்அப் ஆதரவளிக்கிறது. இருப்பினும், வரவிருக்கும் அம்சங்களுக்கு மேம்பட்ட சிஸ்டம் திறன்கள் தேவைப்படுவதால், நிறுவனம் குறைந்தபட்சத் தேவையை உயர்த்துகிறது.
இதன் பொருள், ஆண்ட்ராய்டின் முந்தைய பதிப்புகளான ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 பதிப்புகளில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த புதுப்பிப்பு ஆப்பிள் பயனர்களைப் பாதிக்காது. iOS 15.1 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் ஐபோன்கள், மற்றும் iPadOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் உள்ள ஐபேடுகள், எந்த இடையூறும் இல்லாமல் வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து ஆதரிக்கும்.
செப்டம்பர் 8 முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை (உதாரணமாக AI வசதிகள்) வழங்க பழைய மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் போதுமானதாக இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை, குறிப்பாக இந்தியா, பிரேசில், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் போன்ற, பழைய ஸ்மார்ட்போன்கள் இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பிராந்தியங்களில், ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க பயனர் குழுவைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சாதனங்களில் பலவற்றிற்கு இனி மென்பொருள் புதுப்பிப்புகள் கிடைப்பதில்லை, இது புதிய செயலி தேவைகளைப் பூர்த்தி செய்வதை கடினமாக்குகிறது.
பயனர்களுக்கு ஏற்கனவே இதுதொடர்பாக எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு விட்டதாகவும் மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான உரையாடல்கள் மற்றும் மீடியா கோப்புகளை இழப்பதைத் தவிர்க்க, பயனர்கள் தங்கள் அரட்டைகளை பேக்கப் செய்துகொள்ளுமாறும் மெட்டா கூறியுள்ளது.
மெட்டாவின் இந்த அறிவிப்பால், வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பும் பயனர்கள், ஆண்ட்ராய்டு 6.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு மாற வேண்டும். இந்த மாற்றம் வாட்ஸ்அப் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் பிசினஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.