

இன்று ஏஐ எனும் செயற்கை தொழில்நுட்பம் தான் உலகையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் செயற்கை தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence) பயன்பாடு அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் ஏஐ தொழில்நுட்பத்தால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக இப்போதே எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஏஐ மூலமாக போலியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. ஏஐ மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களும் வீடியோக்களும் பார்ப்பதற்கு அசல் போலவே இருக்கும். ஆனால் இவை போலியானவை என்பதால், அதன் உண்மைத் தன்மையை ஆராய மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு சில கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது மத்திய அரசு.
சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் போலியான ஏஐ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கட்டுக்குள் கொண்டு வரவும், பொதுமக்களை பாதுகாக்கவும் மத்திய அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் 2021 இல், இதற்காக சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் வருகின்ற பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன.
1. இனி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஏஐ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், அது தொடர்பான லேபிள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் லேபிள் இடம் பெறுவதன் மூலம், இது ஏஐ உதவியால் உருவாக்கப்பட்டது என்பதை பொதுமக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
2. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அரசோ அல்லது நீதிமன்றமோ சுட்டிக்காட்டினால், அந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.
3. ஏஐ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க ஆட்டோமேட்டிக் கருவிகளை சமூக வலைதள நிறுவனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
பயனாளர்களின் பொறுப்புகள் குறித்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை சமூக வலைதள நிறுவனங்கள் அறிவுறுத்தல் வழங்க வேண்டும். அதாவது போலியான செய்திகளை ஏஐ மூலம் உருவாக்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டால், கணக்கைத் தற்காலிகமாக முடக்குவது, அபராதம் விதிப்பது அல்லது சட்டப்படி வழக்கு தொடர்வது என எச்சரிக்கைகள் வழங்க வேண்டியது அவசியம்.
ஏஐ தொழில்நுட்பத்தை தவறான முறையில் பயன்படுத்துவது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகையால் பயனர்கள் யாரும் சட்டத்திற்கு விரோதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏஐ மூலம் உருவாக்கி, சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது.
அப்படி பகிர்ந்தால் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், கிரிமினல் சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டங்களின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பயனர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.