

தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வாயிலாக அவ்வப்போது தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் குரூப்4 தேர்வுகள் நடத்தப்பட்டன. முன் எப்போதும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் குரூப்4 தேர்வுகள் நடத்தப்பட்டதில்லை.
இதில் 2025 ஆம் ஆண்டு குரூப்4 காலிப் பணியிடங்களுக்கான எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது தேவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளியாகி கலந்தாய்வுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் முடிந்த பிறகு குரூப் 4 தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிடுவது வழக்கம். அடுத்த ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த கால அட்டவணையை இன்னும் சில தினங்களில் டிஎன்பிஎஸ்சி வெளியிட இருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்-1 குரூப்-2, குரூப்-2A மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுகளில் குரூப் 4 தேர்வுக்கு மட்டும் தான் ஒரே ஒரு தேர்வு நடைபெறும். குரூப் 1 குரூப் 2/2Aஆகிய தேர்வுகளுக்கு பிரிலிம்ஸ் மற்றும் மெயின் ஆகிய இரண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே இருக்கும். ஏனெனில் இதற்கு குறைந்தபட்ச தகுதியே பத்தாம் வகுப்பு தேர்ச்சி தான். வேலைக்கு செல்லும் நபர்கள் கூட கடமைக்கு குரூப்4 தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பாண்டு குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், வினாத்தாள் கடினமாக இருந்ததாலும் கட் ஆஃப் மதிப்பெண் குறைந்தபட்சம் 150-ஐ தொட்டது. நடப்பாண்டு குரூப் 4 தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வேலையை பெற முடியாமல் போன தேர்வர்கள் அடுத்த குரூப்4 தேர்வை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் 2026 போட்டித் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட இருக்கிறது.
இந்த கால அட்டவணையில் துறை சார்ந்த தேர்வுகள் உள்பட குரூப்-1, குரூப்-2/2ஏ மற்றும் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்புகள் இடம் பெற உள்ளன. இம்முறை காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குரூப்4 தேர்வு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போட்டித் தேர்வுகளுக்கு தேர்வர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள, டிஎன்பிஎஸ்சி வெளியிடும் ஆண்டு கால அட்டவணை (Annual Planner) உதவியாக இருக்கும். கால அட்டவணையில் எந்தெந்த தேர்வுகள், எந்தெந்த மாதத்தில் நடைபெறும் என்ற தகவல்கள் அடங்கியிருக்கும். பட்டப் படிப்பை முடித்த பல இளைஞர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது ஒன்றையே இலக்காகக் கொண்டு, பல ஆண்டுகளாக வேலைக்கே செல்லாமல் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர்.
அரசு தேர்வுகளில் தற்போது போட்டித் தன்மை அதிகரித்து வருவதால், அதனைக் குறைப்பதற்கே வினாத்தாள் கடினமாக எடுக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.