
தமிழக அரசு சார்பில் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த நிலையில், தகுதி இல்லை எனக் கூறி பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
இதன்பிறகு மீண்டும் மகளிர் உரிமைத் தொகைக்கு குடும்பத்தலைவிகள் விண்ணப்பித்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அரசு சேவைகள் அனைத்தும் பொதுமக்களைத் தேடி வரும் என அரசு தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்த மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள புதிய ஆன்லைன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் தான் அதிகளவில் வருகின்றன என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தால், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட 45 முதல் 60 நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்ப நிலை குறித்த குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும். இருப்பினும் யாருக்கும் சரியான முறையில் விண்ணப்ப நிலை குறித்து தெரிவிக்கப்படாத நிலையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை சுமார் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இந்நிலையில் தங்களுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா..? இல்லையா..? என பொதுமக்கள் பலரும் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று அறிந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் தற்போது புதிய ஆன்லைன் வசதியை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு. இதன்மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே மகளிர் உரிமைத் தொகையின் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம்.
முதலில் https://ungaludanstalin.tn.gov.in என்ற இணையத்தளத்திற்குச் சென்று, விண்ணப்ப நிலையைக் கிளிக் செய்யவும். பிறகு அதில் விண்ணப்ப எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டால், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தின் தற்போதைய நிலை என்ன என்பது தெரிந்து விடும்.
இந்த ஆன்லைன் வசதி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு வீண் அலைச்சலைத் தவிர்க்கவும் இது உதவுகிறது. விண்ணப்பத்தின் நிலை மட்டுமின்றி, ஏதேனும் குறைகள் அல்லது புகார்கள் இருந்தாலும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம்.