

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்திருந்தார். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் திட்டம்.
இந்தத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது, அது குறித்து முக்கிய தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு கடந்த ஆட்சியில் ரூ.1,000 மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை மே மாதம் வரவு வைக்கப்படுமா என்ற சூழலில், அதற்கு போதிய கால அவகாசம் வேண்டும் என முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார். ஆனால் எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் எப்போதும் போலவே 15-ம் தேதியே மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இருப்பினும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிருக்கு ரூ.2,500 வழங்குவதாக விஜய் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மகளிருக்கு எப்போது ரூ.2,500 வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டத்தை எப்போது தொடங்க வேண்டும் என்பதை முதல்வர் விஜய் தான் முடிவு செய்வார். நிதிநிலைமைக்கு ஏற்ப தவெக அறிவித்த திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
கடந்த ஆட்சியில் திமுக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை எப்போது கொண்டு வந்தது என்பது அனைவருக்குமே தெரியும். மேலும் மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம் குறித்த கேள்வியை முதல்வரிடம் தான் கேட்க வேண்டும்; என்னிடம் அல்ல” என செங்கோட்டையன் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாத அமைச்சர் செங்கோட்டையன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இரண்டு நாள் உடல் பரிசோதனை செய்து முடித்த பிறகு, தற்போது டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021 மே மாதம் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இருப்பினும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை 2023 செப்டம்பர் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இத்திட்டத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், விஜய் தலைமையிலான தமிழக அரசும் மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டத்தை ஓரிரு ஆண்டுகள் கழித்தே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரையில் மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலில் இருக்கும்.