

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கியது. அன்று முதல் அவ்வப்போது பல இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், கடந்த 24ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேலும் மேலும் தீவிரமடைந்து தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு மோந்தா எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு வடகிழக்கு பருவ மழையில் வரும் முதல் புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தென் மாவட்டங்களில் கன மழை காரணமாக விவசாயிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது மோந்தா புயல் காரணமாக சென்னையில் கன மழை பெய்து வருகிறது. மோந்தா புயலானது இன்று அதிகாலை சென்னையில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையிலும், ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா பகுதியில் இருந்து 680 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டிருந்தது.
அடுத்த 12 மணி நேரத்திற்குள் சென்னையில் இருந்து 550 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்ட மோந்தா புயல், மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்தியப் பகுதியின் மேல் தொடர்ந்து நகர்ந்து செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் புயலானது வடமேற்கே நகர்ந்து, வடக்கு-வடமேற்கு நோக்கி நகரும். இந்நிலையில் நாளை காலையில் தீவிர சூறாவளி புயலாக இது உருவெடுக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து புயல் வடக்கு - வடமேற்கே நகர்ந்து, ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் காக்கிநாடா பகுதியில் தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் தீவிரமாக வலுவடைந்து இருப்பதால் தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை உட்பட ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இதுதவிர தெற்கு ஆந்திராவின் ஓங்கோல் முதல் நெல்லூர் வரையிலான பகுதியில் மிக கனமழையும், குறுகிய நேரத்தில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மோந்தா புயல் காரணமாக ஆந்திர பிரதேசின் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சென்னை, எண்ணூர், கடலூர் நாகப்பட்டினம், பாம்பன், காட்டுப்பள்ளி, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டது. புயல் கரையைக் கடக்கும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.