

கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது தமிழக அரசின் ஒரு வீடு கட்டும் திட்டமாகும். இந்த திட்டம் 2030-க்குள் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. 2026-ம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தின் கீழ், குடிசை வீடுகளை அகற்றி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலமாக கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு ரூ.3,50,000 மானியத்தில் ஆர்சிசி கூரையுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ரூ.3.10 லட்சம் நிதியாகவும், மீதமுள்ள ரூ.40,000 மதிப்பில் சிமெண்ட் மற்றும் இரும்புக் கம்பி போன்ற கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பயனாளர்கள் விரும்பினால், வீடுகளுக்கான கட்டுமான பணிகள், கட்டுமான பொருட்கள் மற்றும் தேவையான வசதிகளுக்கு ரூ.1,50,000 வரை கடனும் வங்கிகள் மூலம் பெறலாம்.
பொதுவாக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் சேர்ந்து பயன்பெற முடியும், யாரெல்லாம் பயனை பெற முடியாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்கள் :
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கீழ் குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கும், கிராமப்புறங்களில் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
* ஏற்கனவே சொந்தமாக ஆர்.சி.சி (RCC) கான்கிரீட் கூரை வீடு வைத்திருப்பவர்கள்.
* உங்களுக்கு சொந்தமான குடிசை வீட்டின் ஒரு பகுதி ஓடு, கான்கிரீட், ஆஸ்பெட்டாஸ் சீட்டு போடப்பட்டு இருந்தாலும் விண்ணப்பிக்க இயலாது.
* தங்களுக்கு எனச் சொந்தமாக நிலம்/மனை இல்லாதவர்கள்.
* புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசிப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
* ஏற்கனவே மத்திய அல்லது மாநில அரசின் வீட்டு வசதித் திட்டங்களில் அதாவது PMAY, ஊரக வீட்டு வசதித் திட்டங்களின் மூலம் வீடு கட்ட நிதியுதவி பெற்றவர்கள்.
* சொந்த நிலத்தை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ விட்டு, வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள்.
* கிராம சபை ஆய்வின் போது தகுதியற்றவர்களாகக் கருதப்படுபவர்கள்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் :
* தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
* விண்ணப்பதாரர் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
* கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை குடும்பத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும்.
* வீடுகள் கட்டுவதற்கு சொந்தமாக குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலமும், நிலத்திற்கான பட்டாவும் அவசியம்.
* அரசு ஊழியராகவோ அல்லது ஓய்வுபெற்ற அரசு ஊழியராகவோ இருந்தால் விண்ணப்பிக்க தகுதியில்லை.
* SC/ST, விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள் :
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதார் கார்டு
ரேஷன் கார்டு
முகவரி சான்று
பான் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
வீட்டு பத்திரம் நகல்
வங்கி கணக்கு விவரங்கள்
பாஸ்போட் சைஸ் போட்டோ
வருமானச் சான்றிதழ்
வீட்டிற்கான பட்டா & சிட்டா
- போன்ற ஆவணங்களை கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டி அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். பயனாளிகள் தகுதியின் அடிப்படையில், ஊராட்சி அளவிலான கணக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தை அணுகலாம்.
விண்ணப்பங்கள் சரிபார்ப்பிற்குப் பிறகு, அரசு அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்த பின்னர், தகுதியான விண்ணப்பதாரர்கள் முன்னுரிமை மற்றும் அரசு விதிமுறைகளின் அடிப்படையில் பட்டியலிடப்படுவார்கள். அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், நிதி படிப்படியாக விடுவிக்கப்பட்டு, அரசாங்க மேற்பார்வையின் கீழ் வீடு கட்டும் பணிகள் தொடங்கும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் தேவையில்லை. முகவர்கள் அல்லது இடைத்தரகர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.