ஒவ்வொரு நாளும் 26,000 இறப்புகள்! உலகை அச்சுறுத்தும் புற்றுநோய்: WHO-வின் அதிர்ச்சி அறிக்கை

அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், 2050-ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிப்புகள் கிட்டத்தட்ட இருமடங்காகலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
புற்றுநோய் பாதிப்புகள்
cancer research and WHOAI Image
Updated on

அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், 2050-ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிப்புகள் கிட்டத்தட்ட இருமடங்காகலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள தகவல்கள் தற்போது மருத்துவம் மற்றும் பொதுமக்களிடம் பேசுபொருளாகியுள்ளது.

உலகத்தை பெருமளவில் அச்சுறுத்தி வரும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. புற்றுநோய் வந்துவிட்டால் உயிர் பயத்துடன் அதற்கு உண்டாகும் செலவுகளை நினைத்தே பலரும் கவலைப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தடுப்பு, ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவற்றை வலுப்படுத்த நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், 2050-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் புதிய புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு கிட்டத்தட்ட 350 மில்லியனாக (3.5 கோடி )உயரக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஒரு சிறப்பு நிறுவனமான, புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமையுடன் (IARC) இணைந்து தயாரிக்கப்பட்ட, 'புற்றுநோய் குறித்த உலகளாவிய நிலை அறிக்கை 2026', புற்றுநோயானது ஏற்கனவே ஒவ்வொரு நாளும் 26,000-க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்துகிறது என்றும், ஆண்டுதோறும் சுமார் 20.6 மில்லியன் புதிய பாதிப்புகள் ஏற்படுவதாகவும், கிட்டத்தட்ட 10 மில்லியன் இறப்புகள் நிகழ்வதாகவும் கோடிட்டுக் காட்டுகிறது. இதன் மூலம், இருதய நோய்களுக்குப் பிறகு, இது உலகில் இறப்பிற்கான இரண்டாவது முக்கிய காரணமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

தற்போது நோய் முன்னெச்சரிக்கை காரணமாக புகையிலைக் கட்டுப்பாடு, தடுப்பூசி மற்றும் புற்றுநோய் தடுப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், மில்லியன் கணக்கான மக்கள் உயிர் காக்கும் சிகிச்சையைப் பெறுவதில் பெரும் ஏற்றத்தாழ்வுகளைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

அதிக வருமானம் உள்ள மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு இடையே புற்றுநோயிலிருந்து மீள்வதில் நிலவும் கடுமையான ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டும் ஐ.நா. சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையின் படி இந்த தகவல்கள் நம்மை எச்சரிக்கும் விதமாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பு, இந்த நோயினால் ஏற்படும் கடுமையான சமூக மற்றும் பொருளாதாரச் சுமையையும் எடுத்துரைத்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த அதன் முதல் உலகளாவிய கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டவையாக பல தகவல்களை அது பகிர்ந்துள்ளது.

உலகளவில் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளுக்கு நுரையீரல் புற்றுநோயே முதன்மைக் காரணமாகத் தொடர்கிறது. ஆண்களிடையே நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் மிகவும் பொதுவானவையாக இருக்கும் வேளையில், பெண்களிடையே மார்பக, நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களே அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது.

2024-ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 24 லட்சம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது மற்றும் 694,000 பேர் உயிரிழந்தனர் . உலகின் ஒவ்வொரு நாட்டிலும், பருவமடைந்த பிறகு எந்த வயதிலும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது என்பதையும் குறிப்பிடுகிறது.

cancer research|புற்றுநோய் பாதிப்புகள்
cancer researchAI Image

குறிப்பாக குறைந்தது 45 சதவிகிதத்தினர் நிதி நெருக்கடியை அனுபவிக்கின்றனர் என்றும் பாதிக்கும் மேற்பட்டோர் மனநல சவால்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் கிட்டத்தட்ட அனைத்து ஊதியம் பெறாத பராமரிப்புப் பொறுப்புகள் மற்றும் சமூகத் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அழுத்தங்களை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

அறிக்கையின்படி, பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையே உயிர்வாழும் விகிதங்கள் கணிசமாக வேறுபடுகின்றன. அதிக வருமானம் கொண்ட நாடுகளில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 87 சதவீதம் பேர் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது உயிர்வாழ்கின்றனர் என்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இந்த எண்ணிக்கை சுமார் 42 சதவீதமாகக் குறைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மூன்றில் ஒரு நாட்டிற்கும் குறைவான நாடுகளே தங்களின் உலகளாவிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் புற்றுநோய் சிகிச்சையைச் சேர்த்துள்ளன. இதனால், பல நோயாளிகளுக்கு அத்தியாவசியமான நோயறிதல், சிகிச்சை அல்லது ஆதரவுப் பராமரிப்பு ஆகியவை கிடைப்பதில்லை என்ற தகவலை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆண்டுதோறும் 80,000 புதிய புற்றுநோய் பாதிப்புகள் - பேராபத்து குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை..!
புற்றுநோய் பாதிப்புகள்

புகையிலைப் பயன்பாடு, மது அருந்துதல், உடல் பருமன், உடல் உழைப்பின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV), ஹெபடைடிஸ் B மற்றும் C போன்ற தொற்றுகள் உள்ளிட்ட, தடுக்கக்கூடிய ஆபத்துக் காரணிகளுடன், கிட்டத்தட்ட பத்தில் நான்கு புற்றுநோய் பாதிப்புகள் தொடர்புடையவை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மதிப்பிடுகிறது.

எனவே இவற்றில் நாம் அதிக கவனமாக இருந்தால் மட்டுமே நோயைத் தடுக்கலாம்.

"புற்றுநோய் என்பது நம் அனைவரையும் பாதிக்கும் ஒரு ஆழ்ந்த தனிப்பட்ட நோயாகும். ஆனால், ஒருவர் புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைப்பது, அவர் எங்கு பிறந்தார் அல்லது எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை ஒருபோதும் சார்ந்திருக்கக் கூடாது. இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள சமத்துவமின்மைகள் தவிர்க்க முடியாதவை அல்ல; அவை நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுகளாகும், மேலும் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் அவற்றை மாற்றியமைக்க முடியும்," என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
உயிரியல் ஆபத்தை ஏற்படுத்துமா சூடான் ராணுவ மோதல்?: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
புற்றுநோய் பாதிப்புகள்

ஆகவே, 'வருமுன் காப்போம்' என்பதை நினைவில் கொண்டு, நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் ஆரம்பகாலப் பரிசோதனைகளை உடனடியாகத் தீவிரப்படுத்தாவிட்டால் நிலைமை மோசமடைந்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் குடும்பத்தினர் ஆதரவுடன் மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் அதை எதிர்கொண்டு நலம் பெற வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com