

மாற்றுத்திறனாளிகளும் நம்மை போன்றவர்கள் தான், அவர்களை ஒதுக்கக்கூடாது என்று அவர்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்டங்களையும், இட ஒதுக்கீடுகள் மற்றும் உதவித்தொகை போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது அரசாங்கம். விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் சாதனை புரிந்து வந்தாலும் சில துறைகளில் இவர்கள் வெற்றிப் பெறுவது என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. அப்படி சவால் நிறைந்த நீதித்துறையில் பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் சாதிப்பது என்பது சமூகத்தின் வளர்ச்சியாக மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கான உத்வேகமாகவும் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான வழக்கறிஞர் தன்யா நாதன், மாநிலத்தின் முதல் பார்வையற்ற பெண் மாற்றுதிறனாளி சிவில் நீதிபதி என்ற வரலாற்றை உருவாக்க உள்ளார். இதன் மூலம் சாதிக்க ஊனம் தடையில்லை என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளார்.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளியை ஊனமுற்றோர் என்ற காரணமாக மட்டுமே தடை செய்ய முடியாது என்று கூறி நீதித்துறை சேவையில் சேர அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த பார்வைக் குறைபாடுள்ள சட்டப் பட்டதாரி தன்யா நாதன், இந்த தீர்ப்பால் ஈர்க்கப்பட்டு, நீதித்துறை சேவைத் தேர்வுக்குத் தயாராக முடிவு செய்தார்.
பிறப்பிலிருந்தே பார்வையற்றவராக இருந்த தன்யா நாதன், கேரளாவின் மங்காட்டில் வளர்ந்தார். தர்மடோமில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரையிலும், பின்னர் பரசினிகடவு உயர்நிலைப் பள்ளி மற்றும் மொராஜா அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். அவர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது சட்டத்துறையின் மீது கொண்ட அதிக ஆர்வத்தால், கண்ணூர் பல்கலைக்கழகத்தில் தனது எல்.எல்.பி படிப்பில் முதலிடம் பிடித்தார்.
பட்டம் பெற்ற பிறகு, அவர் தளிப்பரம்பாவில் ஒரு வருடம் ஜூனியர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். வழக்குகளுக்கான குறிப்புகளை பிரெய்லி முறையிலும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் Screen Reading சாப்ட்வேர் உதவியுடனும் படித்து வந்தார்.
கேரளாவில் நீதித்துறை சேவைகளுக்கான தேர்வு ஜூனியர் டிவிஷன் சிவில் நீதிபதிகளைத் தேர்வு செய்ய நடைபெற்றது. இதனின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் தன்யா நாதன் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான பிரிவில் முதல் இடம்பிடித்துள்ளார்.
கேரளா நீதித்துறை தகவல்களின்படி, இதுவரை பார்வை மாற்றுத்திறனாளிகள் நீதிபதியாக பதவி வகித்தது இல்லை என கூறப்படுகிறது. இதன்மூலம் தன்யா நாதன் கேரளாவின் முதல் பார்வை குறைபாடுள்ள நீதிபதியாக மாற உள்ளார். ப்ரெய்லி முறையில் சட்டப் படிப்பை படித்துள்ள இவருக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.
தன்யா நாதன் சிவில் நீதிபதிகளைத் தேர்வில் முதல் இடம் பிடித்ததற்கு, சட்ட வல்லுநர்கள் மற்றும் வழக்கறிஞர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.