
சர்வதேச பொருளாதாரம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. பிரிட்டனை சேர்ந்த பொருளாதார மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், ஜிடிபியையும் மதிப்பீடு செய்து உலக பொருளாதார லீக் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணையில் அடுத்த 15 ஆண்டுகளில் உலகிலேயே சக்தி வாய்ந்த பொருளாதாரமாக எந்த நாட்டின் பொருளாதாரம் இருக்கும் என்பது குறித்த பட்டியலில் ஆசிய நாடுகள் உலக பொருளாதாரத்தில் முன்னணி இடத்தை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், தற்போது சர்வதேச ஜிடிபி 100 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் நிலையில் 2039 ஆம் ஆண்டில் அது 221 ட்ரில்லியன் டாலர்களாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 5 ட்ரில்லியன் டாலர்கள் என்ற மைல்கல்லை எட்டி நான்காவது இடத்தை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2039 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக அமெரிக்காதான் இருக்க போகிறது.
2039ஆம் ஆண்டில் அமெரிக்கா 53.45 ட்ரில்லியன் டாலர்களோடு முதல் இடத்திலேயும், சீனா 44.76 ட்ரில்லியன் டாலர்களோடு இரண்டாவது இடத்தையும். இந்திய பொருளாதாரம் 12.8 ட்ரில்லியன் டாலர்களோடு மூன்றாவது இடத்தையும் பிடிக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும், ஜெர்மனி 7.48 ட்ரில்லியன் டாலர்களோடு நான்காவது பெரிய பொருளாதார நாடாகவும், ஜப்பான் 6.32 ட்ரில்லியன் டாலர்களோடு சக்தி வாய்ந்த ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகவும், பிரிட்டன் ஆறாவது இடத்திலும், பிரான்ஸ் ஏழாவது இடத்திலும், பிரேசில் எட்டாவது இடத்திலும், கனடா ஒன்பதாவது இடத்திலும், இந்தோனேசியா பத்தாவது இடத்திலும் இருக்கும் என சொல்லப்படுகிறது.
சவுதி அரேபியா 2039 ஆம் ஆண்டில் 2.48 ட்ரில்லியன் டாலர்களோடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார லீக் அட்டவணையில் இத்தாலி, தென் கொரியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, ஸ்பெயின், துருக்கி, நெதர்லாந்து, போலந்து, ஸ்விட்சர்லாந்து, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், அர்ஜென்டினா, எகிப்து, இஸ்ரேல், ஸ்வீடன் ஆகிய நாடுகளும் இடம் பிடித்திருக்கின்றன.