அபிமன்யுவின் சக்கரவியூகம் போதிக்கும் நிதி தத்துவம்!

Abimanyu's chakravyuh
Abimanyu's chakravyuh
Published on

எந்த ஒரு முதலீட்டிலும் எவ்வாறு உள்நுழைவது, எவ்வாறு வெளியேறுவது என்று தெரிந்து கொண்டு இறங்க வேண்டும். எவ்வாறு வெளியேறுவது என்பது தெரியாவிட்டால் அந்த முதலீட்டில் நமது பணம் முடங்கிவிடும். நமது பணத்தை இழக்க நேரலாம். 

ஒவ்வொரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு. 

1. வளரும் விகிதம் (Rate of return) 

2. பணத்தை இழக்கும் அபாயம் (Risk)

3. நீர்ப்புத் தன்மை (Liquidity)

எந்த ஒரு முதலீட்டாலும் இந்த மூன்றையும் வழங்க இயலாது.

உதாரணமாக, பங்குச் சந்தையில் வளரும் விகிதம் அதிகம், நீர்ப்புத் தன்மை அதிகம். ஆனால், பணத்தை இழக்கும் அபாயம் அதிகம்.

நிலத்தில் வளரும் விகிதம் குறைவு. பணத்தை இழக்கும் அபாயம் குறைவு. ஆனால், நீர்ப்புத் தன்மை குறைவு. அவசரத் தேவைக்கு நம்மால் நிலத்தை உடனே விற்று பணமாக்க இயலாது. சரியான நபரைத் தேடி, சரியான விலையில் விற்று வெளியேறுவது கடினம்.

எனவே, நமது குறிக்கோளின் காலவரையறைக்கு ஏற்ற முதலீட்டினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு சரியான முதலீட்டினைத் தேர்ந்தெடுக்காவிட்டால், குறிக்கோளுக்காக பணம் தேவைப்படும் காலத்தில், வெளியேற இயலாது அல்லது பணத்தை இழந்து வெளியேற நேரிடும். 

இதையும் படியுங்கள்:
பக்தனுக்கு பணிவிடைபுரிய மகளாக வந்த அம்பிகை!
Abimanyu's chakravyuh

எனவே, நமது குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினை தேர்ந்தெடுத்து, முதலீட்டில் எவ்வாறு உள்நுழைவது, எவ்வாறு வெளியேறுவது என்று அறிந்து கொண்டு, சரியான காலத்தில் சரியானபடி நுழைந்து, சரியானபடி வெளியேற வேண்டும். இல்லையேல், நமது குறிக்கோளுக்கு சரிவராத தவறான முதலீட்டில் நமது பணம் மாட்டிக் கொண்டு நாம் பணத்தை இழக்க நேரிடும்.  

இதனைக் குறித்து ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்.  

ஒரு காட்டில் ஒரு வயதான சிங்கம் இருந்தது. அதனால் முன்பு போல அங்கும் இங்கும் சென்று வேட்டையாட முடியவில்லை. எனவே, அந்தச் சிங்கம் ஒரு தந்திரம் செய்தது. தான் கடுமையான நோய்வாய்ப்பட்டு இருப்பதாக கூறி, தன்னை வந்து பார்க்குமாறு மிருகங்களிடம் வேண்டுகோள் விடுத்தது. அது தனது குகையிலேயே தங்கியிருந்தது. மிருகங்களும் காட்டின் ராஜாவான சிங்கத்திற்கு உடல்நலம் மோசமாகிவிட்டது என அறிந்து வருத்தமடைந்து அதனைக் காணச் சென்றன. அவ்வாறு தன்னைக் காண வந்த மிருகங்களை சிங்கமானது பாய்ந்து கொன்று தின்றது. 

ஒரு நரியும் அவ்வாறு சிங்கத்தைக் காணவந்தது. அது ஒரு புத்திசாலி நரி. வாசலிலேயே நின்று கொண்டு வாசலைக் கவனித்தது. உள்ளே இருந்த சிங்கம் இதனை கவனித்தது. 'நரியாரே! என்ன தயக்கம்! உள்ளே வரலாமே!' என்றது சிங்கம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் ஜாக்கிரதை! அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தல்!
Abimanyu's chakravyuh

'இல்லை சிங்கராஜாவே. நான் குகை வாசலைக் காணும் போது, மிருகங்கள் உள்ளே சென்றதற்கான பாதச்சுவடுகள் தான் உள்ளனவே தவிர, வெளியேறியதற்கான பாதச் சுவடுகளே இல்லை. எனவே, நான் உள்ளே வரமாட்டேன்' என்றது நரி.

சிங்கம் தனது திட்டம் தோல்வியடைந்ததை உணர்ந்தது. இங்கு நரி குகைக்குள்ளே சென்றால் திரும்பி வர இயலாது என்பதனை அறிந்து கொண்டது. வெளியே வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை புரிந்து கொண்டது. எனவே, குகைக்குள்ளே நுழையவில்லை.

நாம் எந்த ஒரு முதலீட்டினையும் தேர்ந்தெடுக்கும் போது அந்த முதலீட்டில் எவ்வாறு உள்நுழைவது, எவ்வாறு வெளியேறுவது என்பதனை அறிந்து கொண்ட பின்னரே நாம் அந்த முதலீட்டில் இறங்க வேண்டும். இதனை ஆங்கிலத்தில் Exit Strategy, எக்ஸிட் ஸ்ட்ராடஜி அதாவது வெளியேறும் யுக்தி என்று கூறுவார்கள்.

அபிமன்யு சக்கர வியூகத்தில் எவ்வாறு உள்ளே நுழைவது என்று தெரிந்து கொண்டிருந்தான். ஆனால், எவ்வாறு வெளியேறுவது என்று தெரியாமல் மாட்டிக் கொண்டான். எனவே, நாம் முதலீட்டில் உள்ளே நுழைவதை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது. எவ்வாறு வெளியேறுவது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com