மக்களே உஷார்..! பாலிசி இருந்தும் ரூ.22 லட்சம் காப்பீட்டை இழந்த நுகர்வோர்: அதிர்ச்சியூட்டும் காரணம்..!

செல்லுபடியாகும் பாலிசியை வைத்திருந்த போதும் ஒரு நபர் ரூ.22 லட்சம் வாகனக் காப்பீட்டுத் தொகையை இழந்தது ஏன் என்பதற்கான காரணத்தை நுகர்வோர் ஆணையம் மேற்கோள் காட்டியுள்ளது.
National Consumer Commission
National Consumer Commissionimage credit-livelaw.in
Published on

கே.பி. நடராஜன் என்பவருக்கு சுமார் ரூ.22 லட்சம் காப்பீட்டு தொகையை நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று தமிழக மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (என்.சி.டி.ஆர்.சி) தற்போது ரத்து செய்துள்ளது.

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் காப்பீட்டு பாலிசி கொண்ட கே.பி. நடராஜன் என்பவரது வாகனம், கடந்த 2011 ஜூன் 7 அன்று விபத்துக்குள்ளானது.

உடனே வாகன உரிமையாளரான கே.பி. நடராஜன், அந்தப் பாலிசியின் கீழ் இழப்பீடு கோரினார். இருப்பினும், டிசம்பர் 7, 2012-ல், விபத்து நடந்த நேரத்தில் வாகனம் அனுமதி நிபந்தனைகளை மீறி இயக்கப்பட்டதாகக் கூறி காப்பீட்டு நிறுவனம் கோரிக்கையை நிராகரித்தது.

காப்பீட்டு நிறுவனத்தின் கூற்றுப்படி, வாகனத்திற்குச் செல்லுபடியாகும் 'காண்ட்ராக்ட் கேரேஜ்' அனுமதி இருந்தபோதிலும், அது ஒரு குறிப்பிட்ட பாதையில் பயணிகளை ஏற்றி இறக்கி, டிக்கெட் வழங்கி 'ஸ்டேஜ் கேரேஜ்' ஆகச் செயல்பட்டது. இது அதன் உரிமத்தின் கீழோ அல்லது காப்பீட்டு பாலிசியின் கீழோ அனுமதிக்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
தேசிய நுகர்வோர் உதவி மையம்: இரண்டு மாதங்களில் ₹7.14 கோடி திரும்பப் பெற உதவி!
National Consumer Commission

கிட்டதட்ட 9 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், 2021, அக்டோபர் 22 அன்று கே.பி. நடராஜனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்ற முன்மாதிரிகளை மேற்கோள் காட்டிய மாநில ஆணையம், ஏதேனும் விதிமீறல் இருந்தாலும் அது கோரிக்கையை முழுமையாக நிராகரிக்க போதுமானது அல்ல கூறியது.

பாலிசி நிபந்தனைகளில் ‘அடிப்படை மீறல’ எதுவும் இல்லை என்று மாநில ஆணையம் கருதியதுடன், அனுமதிக்கப்பட்ட தொகையில் 70% வழங்க உத்தரவிடப்பட்டது.

வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொகை ரூ.22,42,847 உடன் வழக்குச் செலவுகளும் சேர்த்து வழங்க உத்தரவிட்டது.

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் இந்தத் தீர்ப்பால் அதிருப்தி அடைந்த நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் 2022-ல் தேசிய தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகியது.

அதே நேரத்தில், இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரி 2023-ல் நடராஜனும் ஒரு மேல்முறையீட்டைத் தாக்கல் செய்தார்.

வழக்கறிஞர்கள் அபிஷேக் கோலா, அன்ஷுல் மெஹ்ரால் மற்றும் அபிஷேக் குமார் ஆகியோர் வாதிடுகையில், அடிப்படை மீறல் இல்லை என்று மாநில நுகர்வோர் ஆணையம் எடுத்த முடிவு செல்லாது என்று தெரிவித்தனர்.

இருப்பினும், இறுதி விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

முந்தைய விசாரணைகளில் பிரதிநிதித்துவம் இருந்தபோதிலும், இறுதி கட்டத்தில் புகார்தாரர் ஆஜராகவில்லை என்பதை ஆணையம் பதிவு செய்தது.

நீதிபதிகள் ஏ.பி. சாஹி மற்றும் பாரத்குமார் பாண்டியா ஆகியோர் அடங்கிய அமர்வு, 'காண்ட்ராக்ட் கேரேஜ்' அனுமதி மட்டுமே பெற்றுக்கொண்டு ஒரு வாகனத்தை 'ஸ்டேஜ் கேரேஜ்' ஆக இயக்குவது காப்பீட்டு பாலிசி நிபந்தனைகளின் அடிப்படை மீறலாகும் என்றும், காப்பீட்டு நிறுவனம் அந்த கோரிக்கையை நிராகரித்த முடிவு நியாயமானது என்றும் தீர்ப்பளித்தது.

மாநில ஆணையம் எடுத்த முடிவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் பாலிசியின் கீழ் கருதப்பட்ட மற்றும் நடைமுறையில் இருந்த அனுமதி ஒரு 'காண்ட்ராக்ட் கேரேஜ்' அனுமதியாகும். அது எவ்வகையிலும் 'ஸ்டேஜ் கேரேஜ்' அனுமதி அல்ல. எனவே வாகனத்தின் பயன்பாடு அனுமதி விதிமுறைகளுக்கு முரணாக இருந்தது என்று ஆணையம் தெரிவித்தது.

அனுமதி என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டிருந்தால், அதை வேறொரு பிரிவின் கீழ் பயன்படுத்துவதும் இயக்குவதும் அடிப்படை விதிமீறலாகக் கருதப்படும்.

ஆனால், அனுமதி 'காண்ட்ராக்ட் கேரேஜ்'க்காக மட்டுமே இருந்தது என்பதை மாநில நுகர்வோர் ஆணையம் ஏற்றுக்கொண்ட போதிலும், வாகனத்தை 'ஸ்டேஜ் கேரேஜ்' ஆகப் பயன்படுத்துவது அடிப்படை விதிமீறலாகாது என்று மாநில ஆணையம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காப்பீட்டு பாலிசியானது வாகனத்தின் பயன்பாட்டை "மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் அர்த்தத்திற்குள் வரும் ஒரு அனுமதியின் கீழ் மட்டுமே" என்று தெளிவாகக் கட்டுப்படுத்தியிருந்தது.

அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் (ஜனவரி 28, 2011 முதல் ஜனவரி 27, 2012 வரை) வாகனத்திற்குச் செல்லுபடியாகும் 'காண்ட்ராக்ட் கேரேஜ்' அனுமதி இருந்தபோதிலும், விபத்து நடந்த நாளில் அது 'ஸ்டேஜ் கேரேஜ்' ஆக இயக்கப்பட்டது ஆதாரங்களின் மூலம் தெரியவருவதாக ஆணையம் குறிப்பிட்டது.

காப்பீட்டு நிறுவனத்தின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (என்.சி.டி.ஆர்.சி), நுகர்வோருக்கு ரூ.22.42 லட்சம் வழங்க வேண்டும் என்று மாநில ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

மேலும், மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோது காப்பீட்டு நிறுவனம் செலுத்திய சட்டரீதியான வைப்புத்தொகை ஏதேனும் இருந்தால், அதைத் திரட்டப்பட்ட வட்டியுடன் சேர்த்து உரிய விண்ணப்பத்தின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்:
LIC காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்வது லாபமா..? நஷ்டமா..?
National Consumer Commission

இதன் விளைவாக, இழப்பீட்டை உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு, சரியான முறையில் நடத்தப்படாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com