

ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் சமீப காலமாக முட்டல், மோதல் இருப்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் , முன்பெல்லாம் இது போல இல்லை. ரஜினியை விஜய் ரசிகர்களும் கொண்டாடி வந்தனர். முக்கியமாக விஜய் பல படங்களில் ரஜினியின் பெயரை குறிப்பிட்டு , அவரது ரசிகர்களை கவர முயற்சிப்பார். ரஜினியின் ரசிகனாக பல படங்களில் நடித்தும் உள்ளார். விஜயின் இளைய தளபதி என்ற பட்டம் கூட ரஜினியின் தளபதி படத்தை பார்த்து வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
நீண்ட காலமாக தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ரஜினி இருந்து வருகிறார். இன்று வரையில் ரஜினியின் மார்க்கெட்டை வேறு ஒரு தமிழ் நடிகரால் எட்ட முடியவில்லை . மேலும் தமிழ் சினிமாவின் இந்திய ஐகானாவும் அவரே இருக்கிறார். சமீப காலமாக ரஜினியின் பாக்ஸ் ஆபிசோடு ஒப்பிட்டு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விஜய் நடித்த வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், "விஜய் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்" என்று சரத்குமார் கொளுத்தி போட பெரிதாக புகைய ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய் என்றும் விஜய் ரசிகர்கள் பதிவுகளை இட்டனர். இதனால் ரஜினி விஜய் ரசிகர்களுக்கு இடையே முறுகல் ஏற்பட்டது.
இந்நிலையில் ரஜினி தனது ஜெயிலர் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், ஜெயிலர் திரைப்பட இயக்குனரின் முந்தைய படமான பீஸ்ட் சரியாக போகாததால் , தான் நெல்சன் இயக்கத்தில் நடிக்க முதலில் தயங்கியதாக கூறினார். அதைத் தொடர்ந்து ரஜினி ஒரு கழுகு - காக்கா கதை ஒன்றை கூறினார். இந்த கதையை காக்கா என்று விஜயை தான் ரஜினி மறைமுகமாக குறிப்பிட்டதாக ரசிகர்கள் கருதினர். மேலும் ரஜினி குறிப்பிட்ட பீஸ்ட் திரைப்படம் விஜய் நடித்தது என்பதால் விஜய் ரசிகர்களின் கோபம் அதிகமாகியது.
இதற்கு போட்டியாக விஜயும் லியோ திரைப்பட ஆடியோ லாஞ்சில், ஒரு கழுகு காக்கா கதையை ஆரம்பித்தார். மேலும் லியோ திரைப்படத்தில் கழுகு ஒன்று இருக்கும் காட்சிகளும் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் ரஜினிகாந்த் லால் சலாம் ஆடியோ வெளியிட்டு விழாவில் தான் சொல்லிய கதை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் விஜயை குறிப்பிட்டு எதுவும் பேசவில்லை , விஜய் எனக்கு போட்டியாகவும் நான் நினைக்கவில்லை , அவ்வாறு நினைத்தால் எனக்கு மரியாதை இல்லை, கௌரவமும் இல்லை. விஜய்க்கு போட்டி விஜய் தான் , இதை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சண்டை போட வேண்டாம் என்று ரஜினி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது...கடந்த செப்டம்பர் இறுதி வரை சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகளே பிரதான பேசுபொருளாக இருந்தன. ஆனால், கரூரில் நடந்த ஒரு அசம்பாவிதம் அந்தச் சூழலைத் தலைகீழாக மாற்றியது. சர்வதேச அளவில், குறிப்பாகச் சீனா வரை பேசப்பட்ட இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கட்சி நடவடிக்கைகள் தற்காலிகமாக முடங்கியிருந்தன. அந்தச் சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட ஒரு பதிவு, தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இப்படி இருக்கையில் நேற்று ரஜினிகாந்தின் (டிசம்பர் 12) , 75 வது பிறந்தநாள் கோலாகலமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி , தமிழக முதல்வர் ஸ்டாலின் , உள்பட நாட்டின் முக்கிய பிரமுகர்களும் , பாலிவுட் , கோலிவுட் மற்றும் திரை உலகில் உள்ள பல முக்கிய பிரபலங்களும் ரஜினிகாந்த்திற்கு சமூக வலைதளங்களிலும் , தொலை பேசியிலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் சமூக வலைதளத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் விஜய், இந்த வருடம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காதது, தமிழ் திரையுலகில் பேசு பொருளாகியுள்ளது.