

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம்தேதி ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) மற்றும் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ள திமுக தொடர்ச்சியாக 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேபோல, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடிப்பாடி பழனிசாமி, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறார். தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் எந்த கட்சி உடனும் கூட்டணி வைக்காமல் தனித்தனியாக போட்டியிடுகின்றன. அந்த வகையில் இந்த சட்டமன்ற தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.
அந்த வகையில் முதல்முறையாக தேர்தல் களத்தில் நுழைந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வருகை மற்றும் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலான கடுமையான போட்டி, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் தவெக களம் காண்கிறது. தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரங்களிலும் முழுவீச்சில் இறங்கி உள்ளன.
முதல் முறையாக தேர்தலில் களம் இறங்கும் தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அடுத்த வாரத்தில் தவெக, மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதேபோல் வரும் வாரத்தில் சென்னை திநகர், வில்லிவாக்கம், அண்ணாநகர் ஆகிய தொகுதிகளிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், போலீசார் வழக்கும் அனுமதியை பொறுத்து பயண திட்டத்தை மாற்றி அமைக்கவும் தவெக திட்டமிட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான 21-ம்தேதி தவெக தலைவர் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக தவெக தலைவர் விஜய் பிரசார நிகழ்வுகள் திடீர், திடீரென ரத்து செய்யப்பட்டு வருவது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெறும் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
அதாவது கடந்த வாரத்தில் மட்டும் வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகரில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், காரைக்குடியில் பிரசாரத்திற்கு சென்ற விஜய் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேசும் இடத்திற்கு செல்லாததால் பேசாமல் திரும்பினார்.
அதேபோல் இருதினங்களுக்கு முன்பு கடலூரில் விஜய் பிரசாரம் செய்வதாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. திடீர் திடீரென விஜய் பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டுவதற்கான காரணங்கள் குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 9-ம்தேதி கடலூரில் விஜய் பிரசாரம் செய்வதாக இருந்த நாளில் புதுச்சேரியில் தேர்தல் நடந்ததால் சில பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதே சில பாதுகாப்பு காரணங்களுக்காக பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னையில் ஒரு மணிநேரம் மட்டுமே பிரசாரம் செய்ய விஜய்க்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இந்த நேரம் போதுமானதாக இருக்காது என்பதால் அதை ரத்து செய்ததாக கட்சி தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக மற்ற கட்சிகளை விட எங்களுக்கு ஒருநாள் முன்புதான் அனுமதி கிடைத்தது. தேர்தல் கமிஷன், போலீஸ் நிபந்தனைகளை அந்த ஒருநாளில் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதால் பிரசாரத்தை ரத்து செய்கிறோம். தூரம், பாதுகாப்பு, நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவுகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே அடிக்கடி விஜய் கலந்து கொள்ளும் பிரசாரம் மட்டும் ரத்து செய்யப்படுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. நிர்வாக வசதிக்கான இதுபோன்று நடப்பது சகஜம் தான் என்று தவெக கட்சித்தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.