

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து டிரம்ப் உலக நாடுகள் மீது வர்த்தக வரிகளை விதித்து வந்தார். தினம் தினம் ஏதாவது ஒரு நாடுகளுக்கு வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டு டிரம்ப் பரபரப்பை கிளப்பி வந்தார். அமெரிக்கா மீது அந்த நாடுகள் அதிக வரிகளை வைத்திருப்பதால், அதற்குத் தக்க பதிலாக இவ்வரிகள் அமல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் சில நாடுகளுக்கு குறைந்தபட்சமாக 10% முதல் சில நாடுகளுக்கு 40%-க்கும் மேல் வரை என வரி விதிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் பிப்ரவரி 2025-ல் தேசிய அவசர சட்டத்தின் கீழ் (IEEPA) அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரெசிப்ரோக்கல் வரிகள் (Reciprocal Tax), தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி அமல்படுத்தப்பட்டன. ஆனால் இந்த சட்டத்தை டிரம்ப் தனது அதிகாரத்தின் மூலம் தவறாக பயன்படுத்தி உலகின் அனைத்து நாடுகளுக்கும் வரிகளை விதித்தார்.
இந்த வரியால் பல உலக நாடுகளும் பாதிக்கப்பட்டதுடன், சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது, குறிப்பாக இறக்குமதி பொருட்களின் விலை உயர்ந்தது. இந்த வரியை எதிர்த்து பல தரப்பு வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், பல கட்ட விசாரணை, தீர்ப்பு ஒத்திவைப்பு என அனைத்து தடைகளையும் கடந்து நேற்று அதிகாரப்பூர்வ உத்தரவை நீதிமன்றம் அறிவித்தது.
அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், பல நீதிபதிகள் அடங்கிய பென்ச் 6-3 வாக்கெடுப்பில் டிரம்ப் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி உத்தரவை செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பில் 1977 சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் (IEEPA) கீழ் டிரம்ப் தனது அதிகாரம் மீறியுள்ளார் என்று தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பின்படி, உலகின் அனைத்து நாடுகளுடனும் போரில் இல்லை என்பதால், அனைத்து நாடுகள் மீதும் பொதுவான வரி விதிப்பு செல்லாது எனத் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தீர்ப்பளித்தார்.
மேலும் இந்த வழக்கில் டிரம்பின் வாதங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், டிரம்ப் போன்ற நபர்கள் சட்டத்தை துஸ்பிரயோகம் செய்ய முடியாது என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அமெரிக்க உயர் நீதிமன்றம் இந்த முக்கியமான தீர்ப்பை பல கட்ட ஆய்வுகள், விசாரணைக்கு பின்பு அமெரிக்க அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளித்தது.
மொத்தத்தில், இந்தத் தீர்ப்பு டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
மேலும், IEEPA சட்டத்தை டிரம்ப் அரசு தவறாகப் பயன்படுத்தியதால், ரெசிப்ரோக்கல் வரி மூலம் வசூலிக்கப்பட்ட சுமார் $175 பில்லியன் தொகையை அமெரிக்கா உலக நாடுகளுக்குத் திரும்பத் தர வேண்டியிருக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இது டிரம்ப் அரசின் பொருளாதாரத் திட்டங்களுக்கு நிதி ரீதியாகப் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பென் வார்டன் பட்ஜெட் மாடல் அமைப்பின் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.