

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19 ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், சென்னையின் கேப்டன் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி இப்பொழுதே எழுந்து விட்டது. ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பல ஆண்டுகளாக தோனி வழி நடத்தி வருகிறார். இதுவரை தோனி தலைமையில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி கைப்பற்றியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடர் முடிவடையும்போது, தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வியும் உடனுக்குடன் எழுந்து விடுகிறது.
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த போது, அடுத்த சீசனில் விளையாடுவீர்களா என்று தோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு இன்னும் 10 மாதங்கள் நேரம் இருக்கிறது. ஆகையால் பொறுமையாக முடிவெடுக்க போகிறேன் எனத் தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு சீசன்களாக சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல், அதிக தோல்விகளைப் பெற்றது.
இந்நிலையில் இளம் வீரர்களைக் கொண்டு சென்னை அணியை மீண்டும் கட்டமைக்க தோனி விரும்புவதாக தகவல் வெளியானது. அதற்கேற்ப கடந்த சீசனின் கடைசி சில ஆட்டங்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் மினி ஏலம் நடத்தப்பட இருக்கிறது. மினி ஏலத்திற்கு முன்பாகவே ஐபிஎல் அணிகள், தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டியது அவசியமாகும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் மெகா ஏலம் நடைபெற உள்ளது.
கடந்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய அஸ்வின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், ஒரு இளம் ஸ்பின்னரை சென்னை அணி தேடி வருகிறது. இந்நிலையில் சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதனிடம், அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த விஸ்வநாதன், “கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. ஆகையால் இம்முறை இளம் வீரர்களைக் கொண்டு அணியைக் கட்டமைக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். சென்னை அணியின் கேப்டன் தோனி, எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும். இருப்பினும் அடுத்த சீசனில் தோனி நிச்சயமாக விளையாடுவார். இந்த முறை கோப்பையை வெல்வது தான் எங்களின் இலக்கு. இருப்பினும் கோப்பையை வெல்ல முடியுமா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் முடிந்தவரை முயற்சி செய்வோம்” என அவர் கூறினார்.
2025 இல் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சென்னையனின் கேப்டனாக முதலில் ருதுராஜ் கெய்க்வாட் தான் செயல்பட்டு வந்தார். செனனை அணி தொடக்கத்தில் சில தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், ருத்ராஜூக்கு காயம் ஏற்படவே, கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றார் தோனி. மீண்டும் கேப்டனாக தோனி பதவியேற்ற பிறகும் கூட சென்னை அணி தோல்வியிலிருந்து மீளவில்லை.
இருப்பினும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அடுத்த சீசனுக்கான முன்னோட்டத்தை சென்னை அணி அன்றே தொடங்கிவிட்டது. சஞ்சு சாம்சன் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இரண்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க சென்னை அணி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் அடுத்த ஆண்டில் தோனி விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடுவாரா அல்லது கேப்டனாகவும் பொறுப்பேற்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.