

தங்கத்திற்கு மயங்காத பெண்களே இல்லை என்று சொல்லலாம். இந்தியாவில் தங்கம் ஒரு உலோகமாக மட்டும் பார்க்காமல் முக்கிய முதலீடாகவும், செல்வத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், தங்கத்தை ஆபரணமாக மட்டும் பார்ப்பது கிடையாது. கலாச்சாரம், பாரம்பரியம், குடும்பத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கிறார்கள். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் அதிக தங்க நுகர்வு உள்ளது என்றே சொல்லலாம்.
இந்த ஆண்டு ஆரம்பம் முதலே தங்கம் விலை ஏறத்தொடங்கிய நிலையில் கடந்த 2 மாதங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளுடன் கணக்கிடுகையில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை விண்ணை முட்டி சென்று கொண்டு இருக்கிறது.
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே சென்றாலும் இந்திய குடும்பங்களில் தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கையோ, அதன் மீதான விருப்பமோ கொஞ்சமும் குறையவில்லை என்பதை பல தங்கம் சார்ந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
உலக சந்தையில் தங்கத்தின் மீதான தேவை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்துடன் இருப்பது, தங்கம் விலையிலும் அது எதிரொலிக்கிறது. இனிவரும் நாட்களிலும் இதே போக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி ஒரு பவுன் ரூ.97,600 என்ற உச்சத்தை தொட்டு, பின்னர் குறைந்து, கடந்த மாதம் 28-ந் தேதி ஒரு பவுன் ரூ.88,600-க்கு வந்தது. அதனை தொடர்ந்து சில நாட்கள் குறைத்து வந்த நிலையில் மீண்டும் விலையேறத் தொடங்கியது. அந்த வகையில் நேற்று (நவம்பர் 20-ம்தேதி) ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11500க்கும், ஒரு சவரம் ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கார்த்திகை மாதம் திருமண சீசன் தொடங்கியுள்ளதால் ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாகியாகவே மாறிவிட்ட தங்கம், நடுத்தர மக்களுக்கும் வாங்க கடினமாகிவிட்டது.
ஏனெனில், தங்கத்தின் விலையை விட நகை வாங்கும் போது அதற்கு போடப்படும் செய்கூலி, சேதாரம் போன்றவை அதிகமாக இருப்பதாக மக்கள் புலம்பி வருகின்றனர். அந்த வகையில் ஒரு சவரன் நகை வாங்கும் போது ரூ.92000த்துடன் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி சேர்த்து ஒரு லட்சத்தை தொட்டு விடுகிறது. தங்கத்தின் விலை ஏற ஏற நகைக்கான செய்கூலி, சேதாரத்தையும் விற்பனையாளர்கள் உயர்த்தி விட்டனர்.
இந்நிலையில் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயை நெருங்கும் வகையில் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் அதன் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் டாலரின் மதிப்பு உயர்வு என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் இந்தாண்டு நகைகளாக வாங்குவதை விட முதலீட்டு தங்கத்தின் கொள்முதல் அதிகமாக உள்ளது. இந்திய சந்தையில் 2026-ம் ஆண்டில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்று சந்தை வட்டாரங்கள் மதிப்பிட்டு வருகின்றன.
2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது, உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனம் டாலரின் மீது உள்ளதால் தங்கத்தின் விலை குறையும் என்று நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். அதே சமயம், சில நிபுணர்கள் தற்போதைய சர்வதேச சூழல் மாறினால் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர். சில சந்தை ஆய்வாளர்கள் வரஇருக்கும் மாதங்கள் முதலீட்டாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் முக்கியமானதாக இருக்கும் என்று சொல்கின்றனர்.
அதேபோல் தங்கத்தின் விலை 30 முதல் 35 சதவீதம் வரை குறையும் என்று முதலீட்டு நிபுணர் அமித் கோயல் கணித்துள்ளார். வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே தங்கத்தின் விலை இப்படி உச்சத்தை தொட்டதாகவும், அதன் பிறகு சரிவையே சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2007, 2008, 2011 ஆகிய ஆண்டுகளில் தங்கத்தின் விலை 45 விழுக்காடு வரை சரிந்ததாகவும், எனவே இப்போது தங்கம் வாங்குவதில் அவசரம் காட்ட வேண்டாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
உலகின் பல முன்னணி வங்கிகளும் இதே கணிப்பை வெளியிட்டுள்ளன. எனவே தங்கத்தின் விலை குறையுமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.