நாளை 15-ம் தேதி: மகளிர் உரிமை தொகை வங்கி கணக்கில் ஏறுமா..? தவெக அரசின் முடிவை எதிர்பார்க்கும் பெண்கள்..!

நாளை 15-ம்தேதி என்பதால் இந்த மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Magalir Urimai Thogai
Magalir Urimai ThogaiImage credit- AI Image
Updated on

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் (Kalaignar Magalir Urimai Thogai-KMUT)கீழ், தமிழ்நாடு அரசு, தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. ஏழை பெண்கள் பொருளாதார ரீதியாக வாழ்வில் உயர கொண்டு வரப்பட்ட கலைஞர் உரிமை திட்டம் மக்களால் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குடும்பத் தலைவிகளின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வதற்காகவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பிப்ரவரி 2026 நிலவரப்படி சுமார் 1.31 கோடி பெண்களை பயனாளிகளாகக் கொண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசவை தேர்தல் நடைபெறுவதையொட்டி கடந்த பிப்ரவரி மாதத்திலேயே திமுக அரசு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூனறு மாதங்களுக்கு சேர்த்து ரூ.3000 மற்றும் கோடை தொகை ரூ.2000 என மொத்தம் ரூ.5000 தொகையை பிப்ரவரி மாதமே அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைத்து விட்டனர்.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : ஆட்சி மாற்றம்: மகளிர் உரிமை தொகை ரூ.1000 இனி என்னவாகும்?
Magalir Urimai Thogai

மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் மே மாதம் முதல் ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததால் மகளிர் உரிமை தொகை இனி என்னவாகும் என்ற கேள்வி பெண்கள் மனதில் எழுந்துள்ளது.

பொதுவாக திமுக ஆட்சி காலத்தில் மாதந்தோறும் 15-ம்தேதி அன்று மகளிர் உரிமைத் தொகை பெண்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் மே மாதத்திற்கான தொகை இன்னும் வழங்கப்படவில்லை. நாளை 15-ம்தேதி என்பதால் இந்த மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தவெக தேர்தல் வாக்குறுதியாக மதிப்புமிக்க மகளிர் திட்டத்தின்கீழ் மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இதனிடையே நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்களின் பேராதரவுடன் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள விஜய், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 10-ம்தேதி முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

பதவியேற்புக்கு பின்னர் முதலமைச்சரின் முதல் கையொழுத்து மகளிருக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்திற்காக இருக்கும் என்று பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பதவியேற்பு விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய திமுக அரசின் தவறான நிதி நிர்வாகத்தை சுட்டிக்காட்டியதுடன், தமிழ்நாடு அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதாகவும், நிதி நிர்வாகம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்த புதிய திட்டத்திற்கான எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்துள்ளது என்பதே உண்மை. இருப்பினும், இது தொடர்பான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அரசு தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. இருப்பினும், சட்டமன்ற பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் பேசிய முதல்வர் விஜய், முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்ற உறுதிமொழியை அளித்திருந்தார்.

இதனால் முந்தைய திமுக அரசால் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் இந்த மாதம் தடையின்றி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மே மாதம் ரூ.1000 வருமா? வராதா? - தமிழக இல்லத்தரசிகளின் தற்போதைய கேள்வி..!!
Magalir Urimai Thogai

நிதி நிர்வாகம் குறித்த வெள்ளை அறிக்கைக்கு பிறகே புதிய திட்டத்திற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்ற நிலையில், திமுக கொண்டு வந்த மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து தொடர வேண்டும் என்றும் வெள்ளை அறிக்கை வெளியான பிறகு தவெக தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தை கொண்டு வரலாம் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com