என்னது ''மோக்கா'' புயல் வெப்பத்தை அதிகரிக்குமா ?

என்னது ''மோக்கா'' புயல் வெப்பத்தை அதிகரிக்குமா ?

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடல்பகுதிகளில் புயல் உருவாகுவதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளின் நிலப்பரப்பில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும், அந்தவகையில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புயலுக்கு ''மோக்கா'' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக மாறி வங்கதேசம்-மியான்மரை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை உருவானது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலைக்குள் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அத்துடன் மே 10 தேதி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் புயலாக மாறும்.

இது மே 12ஆம் தேதி காலை வரை முதலில் வடக்கு -வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அதன்பிறகு, இது படிப்படியாக மீண்டு, வடக்கு-வடகிழக்கு திசையில் வங்கதேசம், மியான்மர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், வட தமிழகக் கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com