கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் வேலைத் திட்டத்தை அமலுக்கு கொண்டு வர அம்மாநில அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இத்திட்டம் ஊழியர்களின் விடுப்பு உரிமைகளை பறிப்பதாக அமையும் என இடதுசாரி சேவை அமைப்புகள் பலமாக எதிர்க்கின்றன.
5 நாட்கள் வேலைத் திட்டம் குறித்து டிசம்பர் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சேவை அமைப்பு பிரதிநிதிகளுடன் ஒரு ஆன்லைன் சந்திப்பை ஏற்படுத்த தலைமைச் செயலாளர் திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பில் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை கூறலாம். மேலும் இ-மெயில் வாயிலாகவும் கருத்துக்களை கூறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 5 நாட்கள் வேலைத் திட்டத்தை கேரளா அரசு கொண்டுவர நினைத்தபோது, எதிர்கட்சி சேவை அமைப்புகளின் எதிர்ப்பால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இதற்கான முயற்சியை மீண்டும் தொடக்கியுள்ளது கேரள அரசு.
5 நாட்கள் வேலைத் திட்டம் குறித்து இம்முறை கேரள அரசு மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவதாக சேவை அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் எவ்வித வரைவுத் திட்டமும் இல்லாமல் டிசம்பர் 5 ஆம் தேதி ஒரு ஆன்லைன் கூட்டத்தைக் கூட்டியுள்ளது கேரள அரசு.
இந்தத் திட்டத்தை சேவை அமைப்புகள் எதிர்த்தாலும், அரசு சாரா தொண்டு நிறுவன சங்கம் மற்றும் காங்கிரஸ் சார்பு கேரள செயலக ஊழியர்கள் சங்கம் (KSA) ஆகியவை கொள்கை ரீதியாக வரவேற்கின்றன. மேலும் கேரள செயலக ஊழியர் சங்கம் (KSEA), NGO யூனியன் மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய CPM சார்பு அமைப்புகளும் இத்திட்டத்தை வரவேற்றுள்ளன.
தற்போது அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 20 சாதாரண விடுப்புகள் கிடைக்கின்றன. கிராமப் பகுதிகளில் அரசு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், நகரங்களில் காலை 10:15 மணி முதல் மாலை 5:15 மணி வரையிலும் செயல்படுகின்றன.
இதுகுறித்து KSA தலைவர் எர்ஷாத் எம்.எஸ் கூறுகையில் “5 நாட்கள் வேலைத் திட்டம் என்பது உண்மையிலேயே நல்ல திட்டம் தான். இருப்பினும் ஊழியர்களின் விடுப்பு மற்றும் மற்ற உரிமைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். மேலும் வேலை நேரம் உள்ளடக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு, அலுவலக வேலை நேரங்களை சரிசெய்வது குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.
அரசு சாரா நிறுவன சங்கத் தலைவர் ஜாஃபர் கான் ஏ.எம், “5 நாட்கள் வேலைத் திட்டம் குறித்த வரைவுத் திட்டத்தை தெரிந்து கொள்ளாமல் சேவை அமைப்புகள் தங்கள் கருத்துக்களை கூறுவது நல்லதல்ல. மேலும் இந்த முக்கிய பிரச்சினையை ஆன்லைனில் விவாதிப்பதை காட்டிலும், நேரடியாக விவாதிப்பதே சிறந்தது. தற்போது அரசு ஊழியர்கள் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டிருப்பதால், மாலை 5 மணிக்கு ஆன்லைன் கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பது சரியாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் ஐந்து நாட்கள் வேலைத் திட்டத்திற்கான வரைவுத் திட்டத்தை கேரள அரசு வெளியிடாததே, சேவை அமைப்புகளின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாளை மாலை நடைபெறும் ஆன்லைன் கூட்டத்தில் வரைவுத் திட்டம் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.