
சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரெயில்களை நம்பி உள்ளனர். போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை, ஆரம்பத்தில் இருந்த சுணக்கத்தைக் கடந்து, இன்றைக்கு வெற்றிகரமான சேவையாகவும், சென்னையின் வளர்ச்சிக்கான முக்கியத் தூண்களில் ஒன்றாகவும் உருவெடுத்திருக்கிறது.
சென்னையில் கடந்த, 2015-ம் ஆண்டு முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. ஒப்பீட்டளவில் இந்தியாவிலேயே அதிகக் கட்டணம் கொண்ட மெட்ரோ என்கிற பெயரே சென்னை மெட்ரோவுக்கு ஆரம்பத்தில் இருந்தது. பின்னாளில் மெட்ரோ ரெயில் சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
பயண நேரம் குறைவாகவும் வசதிகள் அதிகமாகவும் இருப்பதால் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதில் ஆச்சரியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இது சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு இன்னொரு காரணியாக அமைந்திருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1.01 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நெருக்கடியை சமாளிக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் மும்பையில் உள்ள மெட்ரோ ரெயிலில் பயணிகள் தங்கள் சைக்கிளை எடுத்து செல்ல மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அது குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே பொருந்தும். அதாவது, மும்பை மெட்ரோவின் 2A மற்றும் 7 வழித்தடங்களில் 2022-ம் ஆண்டு முதல் சைக்கிள்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. மேலும், மெட்ரோ ரெயிலில் சைக்கிள் நிறுத்துவதற்கு பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேசமயம் சைக்கிள்களை கொண்டு செல்வதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
இருப்பினும், இப்போது வரை சைக்கிள் எடுத்து செல்வதில் பயணிகள் அதிக கவனம் செலுத்தியதில்லை. இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு பயனர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஒரு பெண் தனது சைக்கிளை மெட்ரோவிற்குள் சிரமமின்றி எடுத்துச் சென்று அதற்காக நியமிக்கப்பட்ட இடத்தில் வைப்பதைக் காட்டுகிறது அந்த வீடியோ. அந்த வீடியோவில் அந்த பெண் சைக்கிளை மெட்ரோ ரெயில் ஏற்றுவதும் முதல் சைக்கிளை அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தி விட்டு பின்னர் அவர் இறங்கும் இடம் வந்தவுடன் எப்படி எளிய முறையில் எடுப்பது என்பது வரை தெளிவாக விளங்கும் வகையில் உள்ளது.
‘மும்பை மெட்ரோவில் இது ஒரு அருமையான வசதி. மும்பைவாசிகள் இதை அதிகமாகப் பயன்படுத்துவதை நான் காண விரும்புகிறேன்’ என்று தலைப்பிட்டு அந்த பெண் வெளியிட்ட வீடியோ வைரலாகி ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. மற்றும் கலவையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
உண்மையாக சொன்னால், மும்பை மெட்ரோவில் மிதிவண்டிகளை நிறுத்துவதற்கான இந்த உள்ளமைக்கப்பட்ட அம்சம் முதலில் கடினமாகத் தெரியலாம், ஆனால் இது வியக்கத்தக்க வகையில் மிகவும் எளிமையானது. தங்கள் வீடுகளில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள பூங்காக்களில் உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டுவதை விரும்புவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பலர் அந்த பெண்ணின் முயற்சியைப் பாராட்டினாலும், மற்றவர்கள் அதன் நடைமுறை சிக்கல்கள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். அந்த அம்சம் இந்தியாவில் உள்ளவர்களுக்கு சரிபட்டு வராது என்றும், 10 பேர் சைக்கிள்களுடன் வரும்போது அவர்கள் என்ன செய்வார்கள்? இது முட்டாள்தனமான யோசனை என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை மெட்ரோ ரெயில்கள் பெரும்பாலும் பீக் நேரங்களில் நிரம்பியிருப்பதால், ஒரு சைக்கிள் வைத்திருப்பவர் 4 பேருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பார்? என்று மற்றொரு பயனர் பிரச்சனையை சுட்டிகாட்டியுள்ளார்.
இருப்பினும், பலரும் இந்த வசதியைப் பாராட்டி, ‘இது மிகவும் அருமை. மேலும் இந்த வகையான அம்சம் டேனிஷ் ரெயில்களில் கூட கிடைக்காது, டென்மார்க் போன்ற மிகப்பெரிய சைக்கிள் ஓட்டுதல் கலாச்சாரத்தைக் கொண்ட சில நாடுகளில் மட்டுமே உள்ளது’ என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரெயிலில் பயணிகள் தங்கள் சைக்கிளை எடுத்து செல்வது மேம்பட்டது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றாலும், மும்பை போன்ற நெரிசலான நகரத்தில் இதைப் பராமரிப்பது நீண்ட காலத்திற்கு சவாலானதாகவே இருக்கும்.
சென்னை மெட்ரோ ரெயிலில், 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் சைக்கிள் கொண்டு செல்ல அனுமதி அளித்திருந்தாலும், மெட்ரோ ரெயிலில் நிலவும் இடப்பற்றாக்குறை பாதுகாப்பு மற்றும் பயணிகளின் வசதி போன்ற காரணங்களுக்காக அந்த அனுமதி பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இந்த வீடியோவை பார்த்த பயனர்களில் பலர் அதிக நெருக்கடியான மும்பை மெட்ரோவிலேயே சைக்கிளை கொண்டு செல்லும் போது சென்னையில் உள்ள மெட்ரோ ரெயில்களிலும் மீண்டும் அந்த வசதி நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பயணிகளின் இந்த கோரிக்கைக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.