

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் விஜய் தொடர்ந்து பொதுமக்களின் நலனுக்காக ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவார் என தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வகையில் முதல் நடவடிக்கையாக முக்கிய இடங்களில் அமைந்துள்ள 717 மதுக்கடைகளை மூடினார் முதல்வர்.
அடுத்ததாக போதைப் பழக்கத்தில் இருந்து தமிழக இளைஞர்களை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ‘Start Run Stop Drugs’ என்ற பெயரில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் சென்னையில் நடைபெற்றது. சுமார் 25,000 பேர் கலந்து கொண்ட இந்த ஓட்டப்பந்தயத்தில் முதல்வர் விஜய்யுடன், அமைச்சர்களும் கலந்து கொண்டு ஓடினர்.
கடந்த வாரம் தமிழகப் போக்குவரத்து துறையில் 300 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்திய முதல்வர் விஜய், பொதுமக்களுடன் சேர்ந்து பேருந்து பயணம் செய்ததோடு, செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். வெகு விரைவில் தமிழ்நாட்டில் அனைத்து வகையான பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை முதல்வர் அறிவிப்பார் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்யும் ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’ கொண்டு வரப்பட்டது. தற்போது வரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும் சூழலில், இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் விஜய், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். இதன்படி அனைத்து வகையான பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறுகையில், “தமிழகத்தில் அனைத்து மக்களும் ஏசி பேருந்தில் பயணிக்க வேண்டும். அதற்காக இனிவரும் காலங்களில் வாங்கப்படும் புதிய அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஏசி வசதியுடன் இருக்க வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம்.
அதோடு தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கான இலவச பயணம் குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
300 புதிய பேருந்துகளை தொடக்கி வைத்து, அரசு பேருந்தில் பயணித்த போது முதல்வர் விஜய் இதனைக் கூறியதாக அமைச்சர் தமிழன் பார்த்திபன் இன்று தெரிவித்துள்ளார்.
சாதாரண பேருந்துகளைக் காட்டிலும் ஏசி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் சற்று அதிகம். அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பு வெளியானால், டிக்கெட் பற்றிய கவலையே பெண்களுக்கு இருக்காது. ஆனால் தமிழக மக்கள் ஏசி பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என முதல்வர் விரும்பும் பட்சத்தில், அதன் டிக்கெட் விலை ஆண்களையே அதிகம் பாதிக்கும்.
ஏற்கனவே பெண்களுக்கு இலவச பயணம் என்பதால், ஆண்களுக்கான டிக்கெட் விலையைக் குறைப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு தான். என்னவாக இருப்பினும் பேருந்து போக்குவரத்தில் தமிழக அரசு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரப் போவது மட்டும் உறுதி.
இருப்பினும் பொதுமக்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தவே ஏசி பேருந்துகளை அதிகளவில் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. ஜூலை கடைசி வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் விஜய் தலைமையிலான தமிழக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.
இந்த பட்ஜெட்டில் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் மற்றும் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துதல் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.