தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பெண்களுக்கான நலத் திட்டங்களில் முக்கிய இடத்தைப் பெறுகிறது மகளிர் சுய உதவிக் குழு (Self Help Group – SHG). பெண்களைக் கொண்டு பெண்களாலேயே நடத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்ட பெண்கள் ஏராளம்.
இத்திட்டம் முதலில், 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதி (IFAD) உதவியுடன், தமிழகத்தில் — தர்மபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்டதாகவும் பின் 1997–98 ஆகும்வரை மகளிர் திட்டமாக மாநில அரசின் நிதியுடன் SHG-கள் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டன என்றும் கூறப்படுகிறது.
மகளிர் சுய உதவிக் குழு என்பது பெண்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்தைப் பலப்படுத்த உருவாக்கப்படும் சிறிய குழுவாகும். பொதுவாக ஒரே பகுதியில் வாழும் பொருளாதாரம் தேவைப்படும் பெண்கள் ஒன்றிணைந்து,சேமிப்பை வழக்கமாக்க,சிறுகடன் பெற, வருமானம் உருவாக்கும் தொழில்கள் செய்து அதன் மூலம் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை அடைய உதவும் ஒரு தன்னார்வ குழுவாக 10 முதல் 20 பெண்கள் சேர்ந்து இந்தக் குழுவை அமைக்கிறார்கள்.
இத்திட்டத்தின் மூலம் பெண்களின் சுயநம்பிக்கை மற்றும் தலைமைத் திறன் வளர்த்தல் , சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்கல், வங்கி கடன் பெறும் சாத்தியத்தை அதிகரித்தல் சுயதொழில்/சிறுதொழில் மேம்படுத்தல், குடும்பத்தின் சராசரி வருமானத்தை உயர்த்தல் மற்றும் சமூக பிரச்சினைகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல் போன்ற பெண்களுக்கான நன்மைகள் சாத்தியமாகிறது.
இதன் நடைமுறை எளிதானது. குழுவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் ஒரு சிறுசேமிப்பு செலுத்துவார்கள். சேமிப்பின் அடிப்படையில் குழு ஒரு பொது நிதியை உருவாக்கும். உறுப்பினர்கள் தேவையின்படி அதிலிருந்து சிறுகடன் பெறலாம்.குழுவின் நம்பகத்தன்மையைப் பார்த்து வங்கிகள் SHG Bank Linkage மூலம் பெரிய கடன்களும் வழங்குகின்றன.குழுவின் கூட்டங்கள், கணக்குகள், முடிவுகள் அனைத்தும் ஜனநாயக முறையில் நடைபெறுவது சிறப்பு..
தமிழ்நாட்டில் தமிழ்நாடு மகளிர் திறன் வளர்ச்சி கழகம் (TNCDW) மூலம் Mahalir Thittam ,PM-SHGS, NRLM போன்ற திட்டங்களின் கீழ் பெண்களுக்கு பயிற்சிகள், உற்பத்தி அலகுகள், சந்தை இணைப்பு போன்றவைகள் வழங்கப்பட்டு வருகிறது..
தொழில் ஆரம்பிக்க உதவியுடன் பொருளாதார பாதுகாப்பு ,சமூகத்தில் நிலையான மரியாதை
கல்வி, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு என இத்திட்டம் பல பயன்களைத் தருகிறது
இந்நிலையில் தமிழக அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெண்கள் சுய உதவிக் குழுக்கள் (SHG) மூலம் எளிதாகக் கடன் பெறும் வகையில், கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைத் தடுப்புச் சட்ட விதிகளை உருவாக்கி அமல்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில் மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டு இந்தச் சட்டத்தில் உள்ள விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் படி பெண்கள் எளிதில் கடன் பெறுவதில் சலுகைகளை பெற வழிவகுக்கும் மேலும் கடன் வழங்கும் நிறுவனங்கள் புதிய விதிகளை ஏற்று செயல்படும் என்று தெரிகிறது.
புதிய விதிகளின்படி கடன் நடவடிக்கைகளைச் சிறப்பாகக் கண்காணிக்கவும், கடன்களின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் உதவும் வகையில் ஒவ்வொரு நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கையையும் செப்டம்பர் 30 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ நியமிக்கப்பட்ட போர்ட்டலில் கடன் வழங்கும் நிறுவனங்கள் பதிவேற்றம் செய்யவும் இந்தப் பதிவுகள் குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகளுக்குப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக தனிநபர்களுக்கு வழங்கும் ரூ.4 லட்சம் வரையிலான கடன்களுக்குப் பிணையம் (Guarantee/Security) எதுவும் பெறக் கூடாது எனவும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் இருந்து ரூ.10 லட்சம் வரை கடன்களுக்குப் பிணையம் எதுவும் பெறக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இதன் மூலம் வியாபாரம் அல்லது வேறு தொழில்களைத் தொடங்க விரும்பும் பெண்கள், சுய உதவிக் குழுவில் உறுப்பினராகச் சேர்ந்துமகளிர் சுய உதவிக் குழுக்களில் கடன் பெறுவதற்கு, அந்தக் குழு 6 மாதங்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்ற பொது விதியை கடைப்பிடித்து குறைந்த வட்டியில் ரூ.10 லட்சம் வரை எளிதாகக் கடன் பெற முடியும்.
மேலும் 18 முதல் 70 வயதுடைய பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், கணவரை இழந்த கைம்பெண்கள் ஆகியோருக்கு இந்தக் குழுக்களில் கடன் பெற முன்னுரிமை அளிக்கப்படும். இதன் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு வங்கி, கடனுக்கான தகுதியை உறுதி செய்யும் எனப்படுகிறது.
இந்த விதிமுறைகள் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் ஒரு முக்கியமான முயற்சியாக பெண்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.