

நாட்டின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான வொண்டர்லா தற்போது சென்னையிலும் கால் பதித்து விட்டது. நேற்று டிசம்பர் 1 ஆம் தேதி வொண்டர்லா பொழுதுபோக்கு நிறுவனத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 02) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வொண்டர்லா தயாராகிவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம் பழைய மகாபலிபுரம் சாலையில், திருப்போரூர் அருகே உள்ள இள்ளளூர் எனுமிடத்தில் கிட்டத்தட்ட 65 ஏக்கர் பரப்பளவில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.510 கோடி செலவில், சுமார் 50-க்கும் மேற்பட்ட ரைடுகளுடன் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் கனமழை பெய்து வந்தாலும், விரைவில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் வரவிருப்பதால், வொண்டர்லாவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதற்கடுத்த 2 வாரங்களில் பொங்கல் விடுமுறையும் வருவதால், வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் 52 சவாரிகள் உள்ளன. இதில் 16 நீர் சவாரிகள் மற்றும் குழந்தைகளுக்கு 10 சவாரிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் மிகவும் குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவென்றால் உலகப் புகழ் பெற்ற மிகப்பெரிய ரோலர் கோஸ்டரும் இங்கு அமைந்திருக்கிறது. லண்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருப்பதைப் போலவே சுமார் ரூ.80 கோடி செலவில் Bolliger & Mabillard ரோலர் கோஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இது தான் இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்ட்டராக இருக்கிறது. இது தவிர மிஷன் இன்டர்செல்லர், ரோலர் போஸ்டர், வை-ஸ்கீம், வொண்டர்லா பம்ப் மற்றும் பைரேட் ஷிப் உள்ளிட்ட சவாரிகளும் இங்கு இடம் பெற்றுள்ளன. வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் ரைடுகளை மேற்கொள்ள நேரடியாகவும் மற்றும் ஆன்லைனிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
திங்கள் முதல் வெள்ளி வரை மூத்த குடிமக்களுக்கு ரூ.947 (25% தள்ளுபடியுடன்)குழந்தைகளுக்கு ரூ.1,010 மற்றும் பெரியவர்களுக்கு ரூ.1,262 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் மூத்த குடிமக்களுக்கு ரூ.1,131, குழந்தைகளுக்கு ரூ.1,206 மற்றும் பெரியவர்களுக்கு ரூ.1,508 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் வொண்டர்லா பூங்கா திறந்திருக்கும்.
கோடை கால வெயிலில் இருந்து தப்பிக்க இங்கு நிழலான பாதைகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. அதோடு குழந்தைகளுக்கு தனி இடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி மற்றும் முதியோர்களுக்கு நிழலான ஓய்வு இடங்கள் ஆகியவையும் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன.
ஒவ்வொரு சவாரியும் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்கள்ஸவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பதை மட்டுமே உணர வேண்டும்; பயத்தை அல்ல. ஏனெனில் அனைத்து சவாரிகளும் உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ளன என்று வொண்டர்லா நிர்வாகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு வெளியில் உள்ள வொண்டர்லா பூங்காவிற்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்வதை உறுதிப்படுத்த, தமிழக அரசுடன் இணைந்து பொது போக்குவரத்தை ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். அதோடு பேருந்துகளில் வருபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடியும் அளிக்கப்பட உள்ளது.