
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரக திசுக்களில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கோல்ட்ரிஃப் இருமல் மருந்தே குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என்றும், அந்த மருந்தில்தான் நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்திருப்பதும் தெரியவந்தது.
இச்சம்பவத்தின் எதிரொலியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களிலும் பரிசோதனை நடத்தவும், ஆய்வு செய்யவும், மருந்துகளை பரிசோதிக்கவும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) முடிவு செய்திருக்கிறது.
கோல்ட்ரிஃப் மருந்தை தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திலுள்ள ‘ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல்' கம்பெனி தயாரித்தது தெரிய வந்ததையடுத்து பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மருந்து தயாரிப்புக்கு பயன்படுத்துகிற மாதிரிகளை கைப்பற்றினர்.
அதில், உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு 48.6% டை எத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்நிறுவனத்தின்மீது வழக்கு பதியப்பட்டு, இருமல் மருந்து கம்பெனியின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.
குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடைய ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் என்ற மருந்து நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக கடந்த அக்டோபர் 13-ம்தேதி ரத்து செய்யப்பட்டு அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கோல்ட்ரிஃப் மருந்துகள் ஏதேனும் நாடுகளில் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) கூறியுள்ளது. மேலும், இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இதுபோன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ கூடாது என்றும் கூறியுள்ள WHO, பொதுவாக ஐந்து வயதுக்குள்பட்டவர்களுக்கு இதுபோன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளது.
இதனிடையே இந்தியாவில் இருந்து நச்சுத்தன்மையுள்ள இருமல் மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா? என WHO கேள்வி எழுப்பியிருந்த நிலையில், கலப்பட மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மருந்துகளை விநியோகிக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டாம் என மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அந்த நிறுவனங்களில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, இந்த மருந்துகள் ஒடிசா, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்பான கோல்ட்ரிஃப்(Coldrif), ரெஸ்பிப்ரெஷ் டி.ஆர்(Respifresh TR), ரீலைப் (ReLife)ஆகிய 3 இருமல் மருந்துகள் பாதிக்கப்பட்ட மருந்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்துகளில் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய டைஎத்திலீன் கிளைகால் அதிகமாக இருப்பதால் இவை உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் இவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இந்த மருந்துகள் ஏதாவது நாட்டில் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே புகாரளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டு உள்ளது.