உலகிலேயே முதல் முறையாக பன்றியின் கல்லீரல் , அறுவை சிகிச்சை மூலம் மனிதனுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் கல்லீரல் செயலிழப்பு நோயாளிகளுக்கு இது பயனளிக்கும். இதனால், லட்சக்கணக்கான மனிதர்களின் உயிர்கள் காக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
சீனாவின் ஜியானில் உள்ள நான்காவது இராணுவ மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கல்லீரல் செயலிழப்பு நோயாளிகளுக்கு பலனளிக்க கூடிய வகையில், மரபணு மாற்றப்பட்ட மினியேச்சர் பன்றியின் கல்லீரலைப் மனிதருக்கு பொருத்திப் பார்த்தனர்.
அந்த மனிதர் மூளைச்சாவு அடைந்து உயிர்காக்கும் கருவியின் கீழ் பராமரிக்கப்பட்டுள்ளார். பொருத்தப்பட்ட பன்றியின் கல்லீரல் பித்தத்தை உற்பத்தி செய்து, தனது செயல்பாட்டை துவங்கியுள்ளது.
தொடர்ச்சியாக பத்து நாட்கள் அந்த கல்லீரல் பொருத்தப்பட்ட நோயாளி தீவிரமாக கண்காணிக்கப்பட்டார். கல்லீரலின் செயல்பாடுகள், இரத்த ஓட்டம், நோயெதிர்ப்பு சக்தி ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன. இந்த சிகிச்சை உறுப்பு மாற்று முறையில் பெரும் சாதனையாக இருக்கிறது. இதனால் கல்லீரல் செயலிழந்த ஒருவர், இன்னொரு மனிதர் கல்லீரலை தானம் செய்வாரா? என்று எதிர்பார்த்து வாழ்நாளை எண்ணும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம்.
இது பற்றி ஆய்வின் தலைவரான லின் வாங் "மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், அறுவை சிகிச்சை மூலம் மூளைச்சாவு அடைந்த மனிதருக்கு பொருத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. பன்றியின் கல்லீரல் மனித உடலில் செயல்பட துவங்கியுள்ளது. வெவ்வேறு நாளங்கள் மற்றும் தமனிகளில் இரத்த ஓட்டத்தை நாங்கள் ஆய்வு செய்ததில் அது சீராக உள்ளது." என்று கூறியுள்ளார்.
மேலும் "கடுமையான கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளியின் பிரச்சினையைத் தீர்க்க எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளது. பன்றியின் கல்லீரல் மனிதனின் கல்லீரலுடன் சேர்ந்து உயிர்வாழ முடியும். மூளைச்சாவு அடையாத உயிருள்ள மனிதர்களிடம் இந்த ஆய்வை நடத்த வேண்டும் என்ற ஆவல் உள்ளது. எதிர்காலத்தில் மேலும் ஆராய்ச்சி நடத்த விருப்பம் உள்ளதாகவும் அதற்கு பல சிக்கல்கள் விதிகள் உள்ளதையும் தெரிவித்த பேராசிரியர் வாங், இந்த சாதனையை அடைவது எங்கள் கனவு என்று கூறினார்.
மனிதருக்கு பொருந்தும் வகையில் பன்றியின் கல்லீரலில் ஆறு மரபணுக்கள் மாற்றியமைக்கப்பட்டன. மாற்றியமைக்கப்பட்ட கல்லீரல்கள் மனித உடலில் உயிர் வாழவும் செயல்படவும் முடியும் என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. நோயாளியின் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோள்களின் பேரில், 10 நாட்களுக்குப் பிறகு இந்தப் பரிசோதனை நிறுத்தப்பட்டது.
ஸ்பெயினில் உள்ள தேசிய உறுப்பு மாற்று அமைப்பின் நிறுவனர் ரஃபேல் மேட்ஸ்சான்ஸ் இதுபற்றி, “மரபணு மாற்றப்பட்ட பன்றியின் கல்லீரலை மூளைச்சாவு அடைந்த மனிதனுக்கு பொருத்துவது இதுவே முதல்முறை. இந்த சோதனையின் இலக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அல்ல, கல்லீரல் செயலிழப்பு அடைந்தவர்களுக்கு ஒரு புதிய உறுப்பு கிடைப்பதாகும். இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் மற்ற உயிரினங்களில் கூட இதேபோன்ற மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படலாம்." என்று கூறியுள்ளார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது இறுதி கட்ட கல்லீரல் நோய்களுக்கு தேவையான சிகிச்சை ஆகும். தேவைக்கும் அதிகமாக கல்லீரல் நன்கொடைக்காக பலரும் காத்திருக்கின்றனர். பன்றிகளின் மனிதனுக்கு சாதகமான மரபணு செயல்பாடுகள் உறுப்பு மாற்றுக்கு உகந்ததாக இருக்கும். இந்த அறுவை சிகிச்சைக்கான பன்றியை குளோனோர்கன் பயோடெக்னாலஜி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் டெங்-கே பான் உருவாக்கியுள்ளார். ஏற்கனவே பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட ஒருவர் சில நாட்கள் கழித்து இறந்துள்ளார். அதனால் இது பற்றி மேலும் ஆராய்ச்சி தேவை என்று சொல்லப்படுகிறது.