2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் மீண்டும் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது . ஒரு நாட்டின் மகிழ்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டும் கொண்டு அளவிடப்படுவதில்லை. மாறாக மக்களிடையே சமூக பிணைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவை பெரும் பங்கு வகிக்கிறது. இந்த அறிக்கையில், பின்லாந்து தொடர்ந்து எட்டாவது முறையாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது .
அடுத்தடுத்த இடங்களையும் நோர்டிக் நாடுகள் கைப்பற்றியுள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவை அந்த வரிசையில் முதல் நான்கு இடங்களில் உள்ளன. மக்களின் சொந்த வாழ்க்கையை பற்றி மதிப்பிடக் கேள்வி கேட்டபோது அளித்த பதில்களின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசை அமைக்கப்பட்டது. ஐ.நாவின் நிலையான மேம்பாட்டு தீர்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான கேலப் வலையமைப்புடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
உலகின் மகிழ்ச்சியான 10 நாடுகளின் பட்டியல்
1.பின்லாந்து
2.டென்மார்க்
3.ஐஸ்லாந்து
4.ஸ்வீடன்
5.நெதர்லாந்து
6.கோஸ்டாரிகா
7.நோர்வே
8.இஸ்ரேல்
9.லக்சம்பர்க்
10.மெக்சிகோ
இந்த நாடுகளுக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், அயர்லாந்து, லிதுவேனியா, ஆஸ்திரியா, கனடா, ஸ்லோவேனியா, ரிபப்ளிகா செகா ஆகிய நாடுகள் உள்ளன. முதல் 20 இடங்களில் எந்த ஒரு வல்லரசு நாடுகளும், பொருளாதார வலிமையில் முன்னணியில் உள்ள நாடுகளும் இடம்பெறவில்லை.
மொத்தமாக 147 நாடுகள் பட்டியலில் உள்ள இந்த தரவரிசையில் இந்தியா 118வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு இந்த தரவரிசையில் இந்தியா 126வது இடத்தில் பின்தங்கி இருந்தது. இதன் மூலம், இந்தியாவின் தரவரிசை எட்டு இடங்கள் முன்னேறியுள்ளது.
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இந்தியாவை விட முன்னணியில் உள்ளது. பாகிஸ்தானின் தரவரிசை 109 ஆக உள்ளது. கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் கடுமையான பொருளாதார சுழலில் தத்தளித்துக் கொண்டு இருந்தாலும், உணவுப் பொருட்கள் பஞ்சத்தால் தவித்தாலும் மகிழ்ச்சியாகவே உள்ளது.
இஸ்ரேல் நாடு தொடர்ச்சியாக போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ளது. இது பல நாடுகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் அமெரிக்கா இந்தாண்டு 24 வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. முன்னதாக அது 2012 ஆம் ஆண்டில் 11வது இடத்தை பிடித்திருந்தது. தரவரிசையில் முதல் 20 இடங்களில் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கோஸ்டாரிகாவும் மெக்சிகோவும் முதல் முறையாக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளன. இந்தப் பட்டியலில் பிரிட்டன் 23வது இடத்தில் உள்ளது.
மகிழ்ச்சியற்ற நாடுகள்:
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் 147 இடத்தை பிடித்து மீண்டும் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய இடங்களில் சியரா லியோன் 146 , லெபனான் 145 , மலாவி 144 மற்றும் ஜிம்பாப்வே 143 ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தரவரிசையில் ஆப்கானிஸ்தான் உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடாக உள்ளது. ஆப்கானியப் பெண்கள் தங்கள் வாழ்க்கை மிகவும் கடினமானது என்று கூறுகிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவில் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் சியரா லியோன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து லெபனான் கடைசியிருந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்த அறிக்கையின் படி மகிழ்ச்சி என்பது செல்வத்திலோ பொருளாதாரத்திலோ இல்லை. அது மக்களின் மனதில் உள்ள ஒரு அற்புதமான உணர்வு ஆகும்.