

விரல் மற்றும் கால் நகங்களை அழகுபடுத்தவும், பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு வர்ணப்பூச்சு 'நெயில் பாலிஷ்' (Nail Polish) ஆகும். தற்போதுள்ள நவீன கால பெண்கள் தங்கள் விரல்களை அழகுபடுத்த அடிக்கடி நெயில் பாலிஷ் பயன்படுத்துகின்றனர். அழகான விரல்களுக்கு மேலும் அழகூட்டும் வகையில் தினம் ஒரு கலரில் நெயில் பாலிஷ் வைப்பதும் ஃபேஷனாகிவிட்டது.
இந்தியாவில் லேக்மே (Lakme), கலர் பார் (Colorbar), ரெவ்லான் (Revlon), மற்றும் மேபிலின் (Maybelline) போன்ற முன்னணி பிராண்டுகளின் நெயில் பாலிஷ்கள் மிகவும் பிரபலம்.
பொதுவாக நெயில் பாலிஷ்கள் மார்க்கெட்டில் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுவதோடு, சில வித்தியாசமான, அதிக விலை கொண்ட நெயில் பாலிஷ்களும் உலகில் உள்ளன. ஆனால் உலகின் மிக விலையுயர்ந்த நெயில் பாலிஷின் விலையை கேட்டால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். அப்படி அதில் என்ன இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த பிரபல நகை வடிவமைப்பாளர் அசாச்சர் போகோசியன் (Azature Pogosian)உருவாக்கியுள்ள “அஸ்ஸாஹர் பிளாக் டயமண்ட் நெயில் பாலிஷ்” (Azature Black Diamond) மிகவும் பிரபலமாக உள்ளது. இது தான் உலகின் மிக விலையுயர்ந்த நெயில் பாலிஷாகும். மேலும் இது ஒரு சாதாரண நெயில் பாலிஷ் மட்டுமல்ல, உலகின் மிக விலையுயர்ந்த ஆடம்பரத்தின் சின்னமாக கருதப்படுகிறது.
அதன் காரணமாக, ஒரு 14.7 மில்லி (0.5 oz) அளவிலான குடுவையின் சர்வதேச விலை $2,50,000. அதாவது இந்திய ரூபாயில் ரூ.1.6 கோடி முதல் ரூ.2.15 கோடி வரை உள்ளது. இந்த நெயில் பாலிஷ் இவ்வளவு விலை அதிகமாக இருக்கக் காரணம், இதில் பயன்படுத்தப்படும் அரிதான பொருட்கள்தான். இந்த நெயில் பாலிஷ் சாதாரண இரசாயனங்கள் அல்லது சாதாரண மினுமினுப்பு தூள் கொண்டு செய்யப்படவில்லை.
இந்த நெயில் பாலிஷில் 267 காரட் மதிப்புள்ள அரிய கருப்பு வைரங்கள் (Black Diamonds) சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த நெயில் பாலிஷுக்கு இயற்கையான, தனித்துவமான பளபளப்பு கிடைக்கிறது.
மேலும் இந்த நெயில் பாலிஷில் உயர்தரமான மற்றும் நச்சுத்தன்மையற்ற பொருட்கள் (ஃபார்மால்டிஹைட் மற்றும் டோலுயீன் போன்ற தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் இல்லாதவை) பயன்படுத்தப்பட்டுள்ளன; இவை நகங்களுக்கு அதிக பளபளப்பையும் மிகுந்த மின்னலையும் அளிக்கின்றன.
இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் நெயில் பாலிஷ் உள்ள திரவம் மட்டுமல்ல, அந்த பாட்டிலும் மிகவும் விலையுயர்ந்தது. ஏனெனில் இந்த பாட்டிலின் மூடியானது கையால் பிளாட்டினம் மற்றும் ஸ்டெர்லிங் வெள்ளியால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் கூடுதலாக 60 கருப்பு வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த நெயில் பாலிஷ் அற்புதமான கருப்பு நிறத்தில் வந்தாலும், தொலைவில் இருந்து பார்த்தால் சாதாரண நெயில் பாலிஷ் போலத் தோன்றும். ஆனால் அதிலுள்ள வெளிப்புறத்துக்கு மறைத்து உள்ள வைரங்கள் அதனை மொத்தமாக விலை உயர்ந்த ஒரு சொகுசுப் பொருளாக மாற்றுகின்றன.
முக்கியமாக, இந்த நெயில் பாலிஷ் அழகுப் பொருளைத் தாண்டி, ஒரு சொகுசு சின்னமாகவும், மெருகூட்டப்பட்ட நகை போன்ற கலைச்சாதனையாகவும் கருதப்படுகிறது.
கெல்லி ஆஸ்போர்ன் (Kelly Osbourne) மற்றும் ரிஹானா போன்ற பிரபலங்கள், பல சிறப்பு நிகழ்ச்சிகளில் இந்த நெயில் பாலிஷை அணிந்து தங்களை அலங்கரித்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றுள்ளனர்.
அதே சமயம் இந்நிறுவனம் சாமானிய மக்களும் வாங்கும் வகையில் சுமார் 2,000 ரூபாய் (25 அமெரிக்க டாலர்) விலையில் மற்றொரு பதிப்பையும் வெளியிட்டது. இது மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நெயில் பாலிஷ் என்பது இப்போது அழகுக்கான பொருளைத் தாண்டி, ஒரு பிரபலத்தையும் ஆடம்பரத்தையும் வெளிப்படுத்தும் புகழ்பெற்ற சாதனையாக மாறி விட்டது.