உலகிலேயே மிக அரிதான ரத்த வகை கண்டுபிடிப்பு..!! 5.4 லட்சம் பேரில் 3 பேருக்கு மட்டுமே உள்ளது..!

Blood
Blood
Updated on

உயிர் வாழ ஏதுவாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் மற்றும் உணவுச் சத்துகள் கொண்டு செல்லும் “வாழ்க்கையின் ஆதார திரவம்” ஆக செயல்படும் ரத்தம் A B AB O என 4 முக்கிய வகைகளாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ரத்த வகையும் மீண்டும் பாஸிடிவ் நெகடிவ் என இரண்டாக பிரியும். இந்த முக்கிய ரத்த வகைகள் ரத்தத்தில் உள்ள ஆன்டிஜென் மற்றும் ஆன்டிபாடி அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் ரத்த வகைகள் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு பரம்பரையாக வருகிறது.

இவற்றில் மிகவும் அரிதான ரத்த வகையாக இந்தியாவில் குறிப்பாக மும்பையில் அதிகமாக காணப்படும் பாம்பே பிளட் குரூப் உள்ளது.

இதற்கு முன்னரும் ஆராய்ச்சியாளர்கள் அரிதாக உள்ள ரத்த வகைகளை கண்டறிந்துள்ளனர்.

அவற்றில் பெங்களூருவில் உள்ள ஐசிஎம்ஆர் (ICMR) மையமும் இங்கிலாந்து ஆய்வகமும் இணைந்து உறுதிப்படுத்திய கிரிப் (CRIB) ரத்தவகை, உலகில் 50 பேருக்கு மட்டுமே இருப்பதாக கூறப்படும் Rh ஆன்டிஜென்கள் முற்றிலும் இல்லாத கோல்டன் பிளட் வகை, பிரான்ஸ் விஞ்ஞானிகளின் 15 வருட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டறிந்த புதிய அரிய ரத்த வகையான குவாடா-நெகட்டிவ் , உலகில் 10-க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே உள்ள அரிய EMM நெகட்டிவ் ரத்தவகை ஆகியவையும் அடங்கும்.

அந்த வரிசையில் தற்போது தாய்லாந்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட “ஹைபிரிட்” ரத்த வகை பற்றி உலகளவில் பெரும் கவனம் கிடைத்துள்ளது.

தாய்லாந்தில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சுமார் 5.4 லட்சம் (544,000+) நபர்களின் ரத்த மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில் உலகிலேயே மிக அரிதான ஹைபிரிட் பிஏ B(A) வகை ரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 5.4 லட்சம் மாதிரிகளில் வெறும் 3 பேருக்கு மட்டுமே இந்த ரத்த வகை இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இது சாதாரண ரத்த வகை அல்ல. B(A) என்பது 9-வது குரோமோசோமில் உள்ள ABO மரபணுவில் ஏற்பட்ட அரிய மரபணுப் பிறழ்வு (Genetic Mutation) ஆகும். இந்த ரத்தம் பார்ப்பதற்கு B ரத்த வகையின் அம்சங்களைக் கொண்டிருக்கும். ஆனால், இதன் மேற்பரப்பில் மிக மிகக் குறைந்த அளவில் (Trace Amounts) 'A' ஆன்டிஜெனும் வெளிப்படும். இதன் 'B' தோற்றம் மற்றும் 'A' கலப்பு காரணமாக, இந்த ரத்தம் A, B, AB, அல்லது O என எந்த பொதுவான ரத்த வகைக்கும் பொருந்தாது. இந்த அரிய மரபணுக் குறைபாடு, மக்கள்தொகையில் சுமார் 0.00055% பேரிடம் மட்டுமே காணப்படுகிறது என்பதால் அச்சம் தேவையில்லை.

ஆயினும் ஏற்கனவே அறியப்பட்ட ரத்தக்கூறுகளின் கலவையாக ஹைபிரிட் இருப்பதால் அவசர காலங்களில் இவர்களுக்கு ரத்தம் வழங்குவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தம் தேவைப்படும் போது தவறான ரத்தம் செலுத்தினால் உடலில் எதிர்வினை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து தரும் வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தாய்லாந்தில் கண்டறியப்பட்ட இந்த B(A) ரத்த வகை, மருத்துவ அறிவியல் மற்றும் ரத்த தானச் செயல்முறைகள் மீது எதிர்காலத்தில் இன்னும் துல்லியமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் 2026: லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
Blood
logo
Kalki Online
kalkionline.com