

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல், சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வாக்காளர் படிவங்களை பொதுமக்கள் சமர்ப்பித்த பிறகு, அவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதன்படி தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். S.I.R. படிவத்தில் தவறான தகவலை நிரப்பும் வாக்காளர்களுக்கு, ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என இன்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
10 லட்சம் வாக்காளர்கள், S.I.R. படிவங்களை சரியாக நிரப்பவில்லை எனக் கூறி, நோட்டீஸ் அனுப்பும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களும், வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்களும் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
வாக்காளர்களின் வசதிக்கு ஏற்ப இன்று (டிசம்பர் 27), நாளை (டிசம்பர் 28) மற்றும் அடுத்த வாரம் ஜனவரி 3 சனிக்கிழமை மற்றும் ஜனவரி 4 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்களில் சிறப்பு முகாம்களை நடத்த உள்ளது தேர்தல் ஆணையம். சிறப்பு முகாம்களை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வாக்குரிமையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
S.I.R. படிவத்தில் 2002 மற்றும் 2005 நிலவரப்படி, குடும்பத்தில் உள்ளவர்களின் வாக்காளர் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். இந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் பேருக்குத் தான், தற்போது நோட்டீஸ் அனுப்பும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. நோட்டீஸ் வந்த பிறகு, அதற்கு தகுந்த காரணங்களை கூறி வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில் வாக்காளர் படிவத்தில் 2002 மற்றும் 2005 வாக்காளர் விவரங்களை தவறாக பூர்த்தி செய்தால் ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகையால் வாக்காளர் படிவங்களை கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் படிவங்களை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் உதவியை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இணைய வருகின்ற ஜனவரி 18 ஆம் தேதி வரை வாக்காளர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்பிறகு பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள கால அவகாசத்திற்குள், வாக்காளர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்கள் நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என தமிழக தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.