

கூகுள் (Google) என்பது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகின் முன்னணி பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது Google Search, YouTube, Android, Gmail, Google Maps, Google Drive, Google Cloud, மற்றும் AI சேவையான Gemini போன்ற பல்வேறு முக்கிய சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் கூகுலின் தேடல், வரைபடம் (Maps), மொழிபெயர்ப்பு (Translate) போன்ற பல சேவைகளை அன்றாட வாழ்வில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். அந்தவகையில் கூகுள் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ஜிமெயில் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒரு வசதியை கூகுள் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பயனர்கள் இனிமேல், புதிய கணக்கு தொடங்காமல், தற்போதுள்ள ஜிமெயில் முகவரியை மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை வழங்க உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு அவசரமாக அல்லது விருப்பமின்றி உருவாக்கிய ஜிமெயில் ஐடியை மாற்ற முடியாமல் இருந்த பயனர்களுக்கு, கூகுள் கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதி பெரும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் அளிக்கும் என்றே சொல்ல வேண்டும்.
கூகுளின் Support பக்கங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, ஜிமெயில் பயனர்கள் @gmail.com டொமைனை மாற்றாமல், பயனர் பெயரை (username) மட்டும் மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக, rowdybaby@gmail.com போன்ற பெயரை தற்போது நீங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்றால், அதை உங்கள் உண்மையான பெயருக்கு மாற்றிக்கொள்ள முடியும். இந்த மாற்றத்தின் மூலம் நீங்கள் புதிதாக ஒரு ஜிமெயில் கணக்கு உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இதில் சில முக்கியமான நிபந்தனைகளும் உள்ளன!
எப்படி மாற்றுவது? (How to Change?)
1. உங்கள் Google கணக்கு அமைப்புகளுக்குச் (Google Account settings) செல்லவும். அல்லது Gmail App-ல் சென்று Manage your Google Account என்பதை கிளிக் செய்யவும்.
2. தனிப்பட்ட தகவல் (Personal Info) என்ற பகுதிக்கு செல்லவும்.
3. மின்னஞ்சல் (Email) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. Google கணக்கு மின்னஞ்சல் (Google Account email) என்பதைத் தட்டவும். அங்கே Google Account Email என்பதற்கு நேராக Edit (Pencil Icon) இருந்தால், அதை கிளிக் செய்து புதிய பெயரை வைக்கலாம். அல்லது
5. Google கணக்கு மின்னஞ்சலை மாற்று (Change Google Account email) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
6. உங்கள் புதிய பயனர்பெயரை உள்ளிட்டு, கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
(குறிப்பு: இந்த வசதி இப்போதுதான் அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக (Rolling out) வந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு இன்னும் வரவில்லை என்றால் சில நாட்கள் காத்திருக்கவும்).
இந்த மாற்றத்தைச் செய்வதற்கு முன் பயனர்கள் புரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் உள்ளன:
நீங்கள் ஜிமெயில் முகவரியை மாற்றிய பிறகும், உங்கள் பழைய Gmail முகவரி நீக்கப்படாது. அது உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு மாற்று மின்னஞ்சலாக (alternate email) மாறும். அதற்கு வரும் மெயில்களையும் நீங்கள் தொடர்ந்து பெற முடியும். பழைய ஐடியைப் பயன்படுத்தியே உள்நுழையவும் முடியும்.
புதிய மெயில் ஐடிக்கும், பழைய alias ஐடிக்கும் வரும் மெயில்கள் அனைத்தும் ஒரே ஜிமெயில் inbox-லேயே காணப்படும்.
உங்கள் Google Account-க்கு எந்த மாற்றமும் ஏற்படாது. Drive, YouTube, Maps, Play Store உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முன்புபோலவே இயங்கும். பழைய மற்றும் புதிய முகவரிகள் இரண்டிலும் நீங்கள் தொடர்ந்து மின்னஞ்சல்களைப் பெறுவீர்கள், மேலும் மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் மற்றும் கோப்புகள் உட்பட உங்கள் தரவுகள் மாற்றப்படாமல் அப்படியே இருக்கும்.
முக்கியமான கட்டுப்பாடுகள் (Limitations):
இருப்பினும், ஒருமுறை ID-யை மாற்றினால், 12 மாதங்களுக்கு உங்களால் மற்றொரு புதிய Gmail முகவரியை உருவாக்க முடியாது.
உங்கள் வாழ்நாளில் மொத்தம் 3 முறை மட்டுமே Gmail ID-யை மாற்ற முடியும்.
உங்கள் பழைய Gmail ID-க்கு வரும் மெயில்களும் உங்கள் புதிய இன்பாக்ஸிற்கே (Inbox) வரும். பழைய ID ஒரு 'Alias'-வாக செயல்படும்.
நீங்கள் விட்டுவிட்ட பழைய ஜிமெயில் முகவரியை வேறு யாரும் பதிவு செய்ய முடியாது. தேவைப்பட்டால், நீங்கள் பின்னர் உங்கள் பழைய மின்னஞ்சலுக்குத் திரும்பலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
யாருக்கு இது பயன்படும்?
சிறுவயதில் ஆர்வக்கோளாறில் விசித்திரமான பெயரில் (Ex: rowdybaby123@gmail.com) மெயில் ஐடி உருவாக்கிவிட்டு, இப்போது வேலைக்கு அல்லது பிசினஸிற்கு பயன்படுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
இதுவரை, ஜிமெயில் முகவரி பிடிக்கவில்லை என்றால், புதிய கணக்கு உருவாக்கி எல்லாவற்றையும் மீண்டும் இணைப்பதே ஒரே வழியாக இருந்தது. ஆனால் தற்போது வந்துள்ள இந்த புதிய அப்டேட்டின் மூலம், கூகுள் பயனர்களுக்கு தங்கள் டிஜிட்டல் அடையாளத்தை இழக்காமல் மாற்றிக்கொள்ளும் சுதந்திரத்தை வழங்கியுள்ளது.
இந்த புதிய வசதி தற்போது படிப்படியாக (gradual rollout) சில நாடுகளில், சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ஜிமெயில் பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்க சில காலம் ஆகலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது.