

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தற்போதே அனைத்துக் கட்சியினரும் தங்களது பிரச்சார வியூகத்தை அமைத்து களத்தில் குதித்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பல்வேறு ஊர்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் நடந்த கரூர் சம்பவத்திற்கு பிறகு பொதுக்கூட்டத்தை தவிர்த்து வந்த விஜய் கிட்டத்தட்ட 73 நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் தனது முதல் பிரச்சார கூட்டத்தை நடத்தி உள்ளார்.
அந்த வகையில் புதுச்சேரியில் கடந்த 5-ம்தேதி விஜய் 'ரோடு ஷோ' நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்றாலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டதையடுத்து உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து த.வெ.க. பொதுக்கூட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறக்கூடாது என்பதற்காக புதுச்சேரி காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், புதுச்சேரியை சேர்ந்த 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கி இருந்தது. மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் வழக்கமாக மேடை அமைத்துப் பேசுவதற்குப் பதிலாக, பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார வாகனத்தில் இருந்து விஜய் பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு ‘கியூ-ஆர்' கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், பாஸ் இல்லாத ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் அப்பகுதியில் கூடியதால் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
அதனால் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் நிகழ்ச்சியில் விதிகளை மீறியதால் காவல்துறையினர் ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில், விஜய் பொதுக்கூட்டத்திற்கு பாஸ் இல்லாமல் வந்தவர்களை தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளே அனுமதி அளித்ததையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி ஈஷா சிங் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து எல்லோரும் உள்ளே போகலாம், பாஸ் இல்லாமல் இருந்தாலும் பெண்கள் அனைவரும் உள்ளே வரலாம் என்று மைக்கில் புஸ்ஸி ஆனந்த் பேசிக்கொண்டிருக்கும் போதே அதை கேட்டு ஆத்திரமடைந்த எஸ்பி அவரது மைக்கை பிடுங்கினார்.
அதிக கூட்டத்தை காட்ட பாஸ் இல்லாத தொண்டர்களையும் உள்ளே அனுமதிக்க கோரிய புஸ்ஸி ஆனந்தை கடுமையாக எச்சரித்தார் பெண் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதுடன் புஸ்ஸி ஆனந்தை கடுமையாக எச்சரித்த புதுச்சேரி பெண் எஸ்.பி. ஈஷா சிங், ‘உங்களால் 40 பேர் இறந்திருக்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு நீங்க சொல்லாதீங்க. வெளியே அதிகமாக கூட்டம் உள்ளது. உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள்’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் போலீசாருக்கும் பொதுமக்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டால் பல போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வலது கரமாக செயல்பட்டு வருபவர் தான் இந்த புஸ்ஸி ஆனந்த். தற்போது தவெக பொதுச்செயலாளராக இருக்கும் இவர், விஜய்யின் அரசியல் நகர்வுகளில் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். ஒரு சாதாரண ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்து, இன்று தமிழக அரசியலில் முக்கிய புள்ளியாக மாறியுள்ளார்.
விஜய் எங்கு சென்றாலும் அவருக்கு நிழலாக உடன் வருபவர் ஆனந்த். ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே விஜய்யின் கட்டளைகளை கொண்டு சேர்ப்பதும், கள நிலவரங்களை விஜய்க்கு தெரிவிப்பதும் இவர் தான். இவரது செயல்பாடுகள் சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், விஜய்யின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரியவராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.